ஜோதிடம்

ஜென்ம குரு தீமை செய்யுமா? III

தமிழகத்திலிருந்து குணா

ஜென்ம குருவின் சாதக பாதகங்களை  இந்த கட்டுரையில் பார்ப்போம்.
பொதுவில் குரு இராசிக் கட்டங்களை ஆண்டுக்கொரு இராசியாக கடக்க பன்னிரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. இதையே ஒரு “மாமாங்கம்”
என்பர். மகம் நட்சத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் வருவதையே “மகாமகம்” என்று கோயில் நகரமான கும்பகோணத்தில்
உள்ள மகாமக குளத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த மாமாங்க கணக்கில் 5, 5, 7, 9, 11 இல் குரு வந்தால் வெகு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆனால் 3, 6, 8, 12 இல் வந்தால் கெடுபலன்கள்
விளையும். இதில் 1, 4 ம் விடுபட்டுள்ளதே என்று நீங்கள் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதை வேண்டுமென்றே தான் விடுவித்துள்ளேன்.
இத்தனைக்கும் 1, 4 ம் குரு கெடுபலன்கள் கொடுக்கும் இடமாகவே கூறும் ஜோதிட பாடல் ஒன்று இருக்கின்றது.

அது என்னவெனில்,
“ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டழிழந்ததும்
ஈசனொரு பத்தினியே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்ம புத்திரர் நாவிலே வனவாசம் போனதும்
சத்திய மாமுனியாறிலே இரு கையிலே தளை பூண்டதும்
வன்மையுற்றிட இராவணன் முடி பன்னிரண்டில் வீழ்ந்ததும்”

இப்பாடலிலே இராமர் வனத்திலே இருக்க, சீதை சீதை சிறை வைக்கப்பட்டதும் ஜென்மகுருவினாலே என்பர். அதேபோல் தர்ம புத்திரர்
வனவாசம் அனுபவித்ததும் அர்த்தாஷ்டம குருவான நான்காம் இடத்து குருவால் தான் என்பர்.
இது முற்றிலும் பொருந்தாது என்றே நான் சொல்வேன். காரணம் ஜென்மகுரு லக்கினத்தில் உச்சம் பெற்றிருக்க பிறந்தவரே ராமர். அதுவும் கடக
லக்கினமாக அது இருந்ததால் அவருடைய தகப்பன் தசரத சக்கரவர்த்தி நாடாளும் மண்ணிற்கு மகனாக பிறக்க வைத்ததே ஜென்ம குருதான். கடக
லக்கினத்திற்கு 9ம் இடமான தந்தை ஸ்தானம் அந்த லக்கினத்திற்கு பெரிதும் உதவாது என்று ஜோதிடம் சொல்கிறது.

அதேபோல் பிதுர் தோஷமும் இராமருக்கு உள்ளது. அதனால் தான் மணிமுடி தாங்கிய இராமரின் உருவத்தை தசரதனால் கற்பனை மட்டுமே செய்ய
முடிந்தது. நேரில் பட்டாபிஷேகம் செய்யும் யோகம் தசரதனுக்கு இல்லாமல் போயிற்று. இவ்வளவு ஏன் தசரதனின் இறுதிச் சடங்கைக் கூட இராமரால்
செய்ய முடியவில்லையே.
சிவ பக்தனான இராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதாக இராமாயணம் சொல்கின்றது. அந்த தோஷமும் அவரது
ஜாதகத்தில் இருப்பதை உச்ச குருவின் மேல் உள்ள சனி பத்தாம் பார்வை உணர்த்துகிறது. கோள் சாரத்தில் ஜென்ம குரு வந்ததால் தான் இவையெல்லாம்
நடந்தது என்று சொல்வதும் முற்றிலும் பொருத்தம் ஆகாது. அதெல்லாம் ராமரின் ஜாதகத்தில் உள்ள பிற தோஷங்களால் விளைந்ததே.

தெய்வ கடாட்சத்தைப் பெற்றுத் தரும் குரு பகவான் உச்சம் பெற்று அவரது லக்கினத்தில் நின்றதால் தான் தெய்வ அவதாரமாக அவர் திகழ்கிறார் என்பதும்
மிகையாகாது.

தருமருக்கு வருவோம். நாலில் சுபகிரகம் வருவதும் தெய்வ கடாட்சத்தையே கொடுக்கும். சோதனைகள் பல ஏற்பட்டாலும் தெய்வ அவதாரமான
கிருஷ்ணரின் துணையல்லவா அவருக்கு இருந்தது.

ஆக ஒன்று மற்றும் நான்கில் குரு இருக்கும் ஜாதகமாகட்டும், கோள் சாரத்தில் வரும் இராசிகளாகட்டும், முற்றிலுமாக வீழ்ந்தெல்லாம் போவதில்லை. 1, 4
இல் குரு வரும் போது நன்மை, தீமை சமஅளவில் நடக்குமென்பதால் அந்த இடங்களில் குரு சமநிலையில் இருப்பார் என்றே நான் சொல்வேன்.

ஆகவே லக்னத்தில் சுபகிரகமான குரு இருப்பது நல்லது. ஆனால் அந்த குரு பகை பெற்றோ, நீச்சம் பெற்றோ இருக்கக்கூடாது. மேலும் லக்னத்தில்
மீதுள்ள குருவின் மீது அசுபர்கள் பார்வை படுவதும் தவறே. இந்த அமைப்பில் உள்ளவர்கள் பெரியோர்களின் கோபத்திற்கும் குரு சாபத்திற்கும் அடிக்கடி
ஆளாவார்கள்.

கோள் சாரத்தில் ஜென்ம குரு வரும்போது அடிக்கடி அலைச்சல் திரிச்சல் ஏற்படும். காரணமின்றி கோபம் வருவதும் இல்லறத்தில் மனைவியுடன் கருத்து
வேறுபாடு ஏற்படுவதும் வாடிக்கையாக இருக்கும். சான்றோர்கள் பேச்சை மதிக்கத் தவறுவார்கள். அது மட்டுமன்றி அலைச்சலுக்கேற்ற பலன்
கிடைக்காமல் தடுமாறுவார்கள். இவையெல்லாம் குரு நின்ற ராசி பகை அல்லது நீச்சம் பெற்றால் தான் நட்போ, ஆட்சியோ, உச்சமோ, சமமோ பெறும்
இராசிகள் பெரும்பாலும் மோசமாக பாதிக்கப்படுவதில்லை.

ஆனால் எந்த ராசியாக இருந்தாலும் உச்சம், நீசம், நட்பு, சமம், பகை என்று எந்த அமைப்பில் குரு ஜென்ம ராசியில் நின்றாலும் மனைவியோடு அல்லது
கணவரோடு கருத்து வேறுபாடு என்பது மட்டும் எவருக்கும் பொருந்தும் ஒரே பொது பலன்.
இது ஏனெப்படி?
பொதுவின் ஏழாம் இடம் என்பதே சுக்கிரன் ஆதிபத்தியம் உள்ள இடமாக பார்க்கப்படுகிறது. இருக்கட்டுமே. குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன்இவர்கள் சுபகிரகங்களாயிற்றே. அதுவும் குரு பார்க்க கோடி நன்மை என்று தானே சொல்கின்றார்கள். அப்புறம் எப்படி என்று நீங்கள் குழம்புவது புரிகின்றது.
இது மட்டுமில்லை குரு – சுக்கிரன் ஒன்றாய் இருப்பது கூட ஆபத்தானதே! ஜாதக கட்டத்தில் மட்டுமல்ல, எண்கணி த ஜோதிடத்திலும் கூட அப்படிதான்.  அது ஏன்? என்பதையும் இரண்டாம் மிடத்தில் குரு இருப்பதற்க்கான பலன்களையும் அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.

கருத்து தெரிவிக்க