ஜனாதிபதி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்ப திகதி எக்காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் செயற்பாடுகள் இம்மாதம் 30ம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்.
அதற்கு பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததும் அவை உறுதிசெய்யப்படும்.
அத்தாட்சிப்படுத்தும் அதிகாரியின் சான்றிதழ் கிடைத்ததும் தேர்தல் தொகுதியின் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக வாக்காளர் இடாப்பு நாடெங்கிலுமுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு 2018ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படும்.
வாக்களிக்க ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் தகுதிபெற்றுள்ளனர். தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க