ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை ‘அரசியல் சூழ்ச்சி’ திட்டமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இதனை ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டி மடுல்கல பகுதியில் அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் இன்று (20.09.2019) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“இலங்கையில் 1972 ஆம் ஆண்டில் ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டாலும் அக்காலகட்டத்தில் பிரதமர் பதவியே நிறைவேற்று அதிகாரம் கொண்டதாக இருந்தது.
எனினும், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜனவர்தனவால் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.
மிக முக்கிய அதிகாரங்கள் எல்லாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கரங்களுக்குள் சென்றடைந்தன.
அப்பதவியை வகிப்பவர்களை சட்டரீதிலாக சவாலுக்குட்படுத்தமுடியாத நிலையும் உருவானது. குறிப்பாக ஒரு ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதேதவிர ஏனைய அனைத்தையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியால் செய்ய முடியும் என அன்றே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஒழிப்போம் என சபதமெடுத்து இரண்டு தடவைகள் ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா அம்மையார், தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி வசம் அதிகாரம் செல்வதை தடுப்பதற்காக குறித்த அதிகாரத்தை அவர் பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு.
இதனையடுத்து அதே பல்லவியை பாடிக்கொண்டு மஹிந்த ராஜபக்சவும் அரியணையேறினார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கதிரையில் அமர்ந்ததும் அவரின் மனநிலைமையும் மாறிவிட்டது.
‘ஒழிப்போம்’ என சூளுரைத்தவர், 18 ஆவது திருத்தச்சட்டத்தின்மூலம் மேலும் பல அதிகாரங்களை கையகப்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை சர்வாதிகாரமாக மாற்றியமைத்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் பேரம் பேசும் சக்தியை வழங்குகின்றது.
தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியென்பதால் அவர்களையும் அவரணைத்துக்கொண்டு செல்லவே அரசாங்க தலைவர் முற்படுவார்.
நிலைமை இப்படியிருந்தம் ஜனநாயகத்தைகருத்திற்கொண்டு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு நாம் நிபந்தனையின்றி ஒத்துழைப்பு வழங்கினோம்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றெல்லாம் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நம்பியே நேசக்கரம் நீட்டினோம். ஆனால், பிரதான உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையானதொரு தீர்வை வழங்காமல், மேலும் பல பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை காணாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமானால் அது மேலும் பல பிரச்சினைகளுக்கு வழிசமைத்துக்கொடுக்கும்.
ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிமீது கைவைக்க நினைப்பது பொருத்தமற்ற செயற்படாகும்.
அதிலும் குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக தேசிய முக்கியத்துவமிக்க விடயத்தில் கையடிக்க நினைப்பது மீண்டும் அரசியல் ஸ்தீரமற்றதன்மையையே உருவாக்கும்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயங்குகின்றது என்ற விம்பத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்கிவிடும். அது எதிராளிக்கே சாதகமாக அமைந்துவிடும். ‘’ என்றார்.
கருத்து தெரிவிக்க