எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் உங்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனரா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் சிரித்து மழுப்பியவாறு ஊடகவியலாளர்களை கடந்து சென்றிருந்தார்.
வவுனியா மாங்குளம் அல் ஹாமியா மகாவித்தியாலயத்தில் கற்றல் வள நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் அவரிடம் மேற்கண்டவாறு கேட்டபோதே அவர் இவ்வாறு செயற்பட்டிருந்தார்,
இதேவேளை ஊடகவியலாளர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சியா என கேட்டபோது,
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது இது தருணமல்ல.
சிறுபான்மை கட்சிகளை பொறுத்தவரையில் ஜனாதிபதி முறைமை நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஆகவே அவ்வாறான எந்தவொரு பிரேரனைக்கும் நாம் ஆதரவு கொடுக்கமாட்டோம் என தெரிவித்தார்.
இதன்போது சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என சிறுபான்மை கட்சிகள் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேட்டபோது,
சிறுபான்மை கட்சிகள் சஜித் பிரேமதாசாவை சந்தித்து பேசினோம்.
அவரது கொள்கை அவர் என்ன செய்யப்போகின்றார் என்பது தொடாபிலும் பேசினோம். இந் நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி இவ்வாரத்தில் தமது வேட்பாளரை அறிவிப்பதாக கூறியுள்ளனர்.
ஆகவே நாங்கள் இது தொடர்பாக எமது கட்சியுடன் பேசி இறுதி முடிவை அறிவிப்போம் என்றார்.
கருத்து தெரிவிக்க