நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் முன்வைக்கப்பட்ட யோசனை கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக ஜே.வி.பியால் தனிபநர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இதற்கு தலைமை வகித்திருந்தார். எனினும், அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், திகாம்பரம் மற்றும் சஜித் ஆதரவு அணி அமைச்சர்கள் குறித்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு யோசனையை முன்வைப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்லவெனவும் சுட்டிக்காட்டினர்.
பிரதமரும் அவருக்கு சார்பான அமைச்சர்களும் இதை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டாலும் எதிர்ப்புகள் வலுத்ததால் யோசனை முன்வைக்கப்படாமல், கைவிடப்பட்டது என அறியமுடிகின்றது. சுமார் அரை மணிநேரமே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு சஜித் பிரேமதாச தயாராகிவரும் நிலையில் அவருக்கு கடிவாளம் போடும் நோக்கிலேயே பிரதமரால் இந்நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே தான் அமைச்சரவையைக் கூட்டியதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க