உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘ஐ.தே.கவிலிருந்து வெளியேறமாட்டேன்’ – சஜித்தின் விசேட அறிவிப்பு!

” ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் எண்ணம் இல்லை. எனக்காக வாய்ப்பை கட்சி வழங்கும் என உறுதியாக நம்புகின்றேன்.” – என்று ஐ.தே.கவின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (17) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

”  ஐக்கிய தேசியக் கட்சியானது ஜனநாயகக் கட்சியாகும். எனவே, தனி குடும்பமொன்றை மையப்படுத்தியோ அல்லது தனி நபரை முன்னிலைப்படுத்தியோ – தனி அறையில் இருந்தவாறு இங்கு தீர்மானம் எடுக்கப்படுவதில்லை.

ஜனநாயக வழியிலேயே முடிவுகள் எடுக்கப்படும். இதன்காரணமாகவே கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக்குழுவை கூட்டி வெகு விரைவில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துவருகின்றேன். கட்சி தலைவரிடம் இது குறித்து நேற்றுகூட எழுத்துமூலம் அறிவித்திருந்தேன்.

செயற்குழு மற்றும் நாடாளுமன்றக்குழுவில் பெரும்பான்மை ஆதரவு எனக்கு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன்காரணமாகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தேன்.

எனக்காக வாய்ப்பை கட்சி வழங்கும் என திடமாக நம்புகின்றேன். எனவே, கட்சியிலிருந்து வெளியேறி போட்டியிடும் எண்ணம் இல்லை.

ஜனாதிபதி தேர்தல் பற்றியே தற்போது முழு கவனமும் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் விவகாரம் குறித்தெல்லாம் தேர்தலின் பின்னரே கலந்துரையாடப்படும்.” என்றார்.

 

 

 

கருத்து தெரிவிக்க