“ ஆசிரியர் சேவைக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து அரச துறைகளிலும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். இதற்காக விசேட பொறிமுறையொன்று முன்னுரிமை அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும். ” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை (17.09.2019) நடைபெற்ற இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின்போதே வேலுகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“மலையக சமூகத்துக்கான அடிப்படை அரசியல் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் மிகவும் சாதுர்யமான முறையில் வென்றெடுத்துவருகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் எமது மக்களின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அவ்வாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் ‘அனைத்து அரச துறைகளிலும் வேலைவாய்ப்பு’ என்ற விடயமும் பிரதான இடத்தை வகிக்கும்.
குறிப்பாக ஆசிரியர் மற்றும் சமுர்த்தி சேவைகளுக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து அரச துறைகளிலும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்போது மலையக இளைஞர், யுவதிகளை முன்னுரிமை அடிப்படையில் உள்வாங்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படவேண்டும். அதற்கான அழுத்தத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி கொடுக்கும்.
அதுமட்டுமல்ல தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் பல தசாப்தங்களாக வளப்பற்றாக்குறைகள் இருந்துவருகின்றன. இன்னும் பல சிக்கல்களும் இருக்கின்றன. எனவே, ஏனையப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் எமது சமூகத்துக்கான கல்வி சேவையிலும் ஓரவஞ்சகம் காட்டப்பட்டுள்ளமை கசப்பான உண்மையாகும்.
ஆகவே போட்டி பரீட்சைகளின்போது எமது இளைஞர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படவேண்டும். எமது சமூகத்துக்கும் முன்பிருந்தே முழுமையாக அரசியல் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் வழங்கியிருந்தால் அவர்களும் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்திருப்பார்கள். ஆனால் அரசுகள் அவ்வாறு செய்யவில்லை. இதனால்தான் விசேட சலுகைகளையும், முன்னுரிமைகளையும் கோருகின்றோம்.” என்றார்.
கருத்து தெரிவிக்க