உள்நாட்டு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சவுதி தாக்குதலுக்கு பிறகு மசகு எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது

சவுதியில் எண்ணெய் வயலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உற்பத்தி குறைந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உலகிற்கு தேவையான 10 சதவீத மசகு எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சந்தை நிலவரப்படி மசகு எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பிரெண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 60.15 அமெரிக்க டாலராக இருந்தது.

அதன்பின்னர் 12 சதவீதம் உயர்ந்து, ஞாயிற்றுக்கிழமை 70.98 டொலராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் மசகு எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக, சர்வதேச பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மசகு எண்ணெய் விலையும் உயர்ந்தால், சர்வதேச பொருளாதாரத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

கருத்து தெரிவிக்க