“பாராளுமன்றத் தேர்தலின்போது கல்விதுறைசார் விடயங்கள் தொடர்பிலேயே கூடுதலான உறுதிமொழிகளை வழங்கியிருந்தேன். அவ்வாறு வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன.எனவே, கடந்த நான்கரை வருடங்களில் கண்டி மாவட்டத்தில் தமிழ்க் கல்வித்துறையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (10) காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“கண்டி மாவட்டத்தில் கடந்தகாலங்களில் அபிவிருத்தி செயற்றிட்டங்களின்போது சகோதர இன பாடசாலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. தமிழ்ப் பாடசாலைகளுக்கு கிள்ளிகொடுக்கும் வகையிலேயே சேவைகள் வழங்கப்பட்டன. அதிலும் குறிப்பாக தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு அபிவிருத்திகள் மற்றும் கல்விசார் சேவைகள் உரியவகையில் சென்றடையவில்லை.
இப்படியான இரண்டாம்நிலை கவனிப்பு, புறக்கணிப்பு உள்ளிட்ட விடயங்களால் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை கண்டிவாழ் கல்வி சமூகமும் உணர்ந்தது. அதனை வென்றெடுப்பத்கு பெரும் ஒத்துழைப்பை வழங்கியது.
மாகாணசபையில் இருக்கும்போதே பல சேவைகளை பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளேன். ஆனாலும், பாராளுமன்றம்சென்ற பின்னரே உரிமைகளை தட்டிக்கேட்டு, போராடியேனும் பெற்றுக்கொள்ளும் பேரம்பேசும் சக்தி எமக்கு கிடைத்தது.
கடந்த நான்கரை வருடங்களில் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பௌதீக வளங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளேன். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின்கீழ் ஏனைய பாடசாலைகளுக்கு நிகராக தமிழ்ப் பாடசாலைக்கும் அபிவிருத்திகள், சேவைகள் கிடைப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளேன். தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கும் உயரிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக இவ்வாரத்தில் மாத்திரம் கண்டி மாவட்டத்தில் பல தமிழ்ப் பாடசாலைகளில் புதிய கட்டங்களை மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கவுள்ளேன்.
கண்டி வெஷ்ட்வோல்ட் தமிழ் மகா வித்தியாலயம், பன்விலை அபிராமி வித்தியாலயம், கலமுதன தமிழ் வித்தியாலயம், நியூபிகொக், ஓல்ட்பீகொக் ஆகிய பகுதிகளிலேயே பாடசாலைகளில் கட்டங்கள் திறந்துவைக்கப்படவுள்ளன.
அத்துடன், மேலும் பல பாடசாலைகளில் அபிவிருத்திகளுக்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. அவற்றை துரிதகதியில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி பல சேவைகளை கல்வித்துறையில் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
எனவே, சொல்லளவில் மட்டும் நின்றுவிடாமல் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுக்கும் அரசியலையே நான் நடத்திவருகின்றேன். இது மக்களுக்கும் தெளிவாக புரியும். தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருப்பதாலேயே இப்படியான சேவைகளை பெறமுடிகின்றது. இல்லையேல் எமக்கு கிடைக்கவேண்டிய அபிவிருத்திகள், உரிமைகள்கூட வேறு நபர்களுக்கே சென்றடையும்.
ஒரு சிலர் குறைகூறுவதையே கொள்கையாகக்கொண்டு செயற்பட்டுவருகின்றனர். தேனை வழங்கினால்கூட சற்று கசப்பாக இருக்கிறதே என கூறும் நிலையில்தான் அவர்கள் இருக்கின்றனர். அப்படியானவர்களின் கருத்தைக்கேட்டு, போலி பரப்புரைகளை நம்பி நாம் முடிவெடுக்ககூடாது. அன்று எப்படி, இன்று எப்படி என உங்கள் மனசாட்சியிடம் கேட்டுபாருங்கள். மனசாட்சி நிச்சயம் உண்மையை சொல்லும்.” என்றார்.
கருத்து தெரிவிக்க