நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு குறுக்கு வழி அரசியல் முன்னெடுக்கப்படுமானால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் இன்று (01.09.2019) தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு திரைமறைவில் பேச்சுகள் இடம்பெற்றுவருவதாகவும், பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர் என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா என வேலுகுமார் எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இன்னும் உரிய வகையில் அதிகாரங்கள் பகிரப்படவில்லை. கடந்தகாலங்களில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
நல்லாட்சியின்கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்தாலும், உரிமைகளை முழுமையாக அனுபவிக்ககூடிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை.
இந்நிலையில் ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்பது போல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது ஏதேனுமொரு வழியில் பாதுகாப்பு கவசமாக இருந்து வருகிறது.
எனவே, எனவே, அந்த முறைமையை நாம் பாதுகாக்க வேண்டும்.
குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலின்போதே முழு இலங்கையும் ஒரு தேர்தல் தொகுதியாக மாறுகிறது. அதுமட்டுமல்ல சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கியும் தீர்மானிக்கும் சக்தியாக மாறுகின்றது.
எனவே, ஜனாதிபதி தேர்தல் காலத்தில்தான் கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை வென்றெடுப்பதற்கான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும், பேரம் பேசுவதற்கும் களம் கிடைக்கின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருப்பதாலேயே சிறுபான்மையின மக்கள் மீதும் கட்டாயம் கவனம் செலுத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்க தலைவர்கள் முற்படுகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமானால் சிறுபான்மையின மக்கள் பேரம் பேசும் சக்தியை இழப்பதுடன், அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்த சரத்துகள் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலும் அதில் கையடிக்கவேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.
கருத்து தெரிவிக்க