வெளிநாட்டு செய்திகள்

இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது: பாகிஸ்தான் ஜனாதிபதி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கூறியுள்ளார்.

வைஸ் நியூஸ் என்ற கனடா-அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி இவ்வாறு கூறியுள்ளார்.

‘காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவுகளை அரசியலமைப்பில் இருந்து நீக்கி விட்டதனால் அங்கு நிலைமை மேம்படும் என்று இந்தியா நினைத்தால், இந்திய அரசாங்கம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வசித்து வருகிறது என்று அர்த்தம்.

இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொண்டு இந்தியா உண்மையில் தீவிரவாதத்தினை ஊக்குவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடி வருகிறது என கூறியுள்ளார்.

நீண்ட காலத்திற்கு பின் இந்த விவகாரம் சர்வதேச அளவிற்கு சென்றுள்ளது என கூறிய அவர், பாதுகாப்பு கவுன்சிலின் எண்ணற்ற தீர்மானங்களை இந்தியா தவிர்த்து விட்டது. இந்த விவகாரம் சுமுக முறையில் தீர்க்கப்பட பாகிஸ்தானுடன் அமர்ந்து பேசுவதற்கும் இந்தியா மறுத்து விட்டது என்றும் கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதல்களை இந்தியா நடத்த கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால் போரை தொடங்க பாகிஸ்தான் விரும்பவில்லை. இந்தியா போரை தொடங்கினால், எங்களை தற்காத்து கொள்வதென்பது எங்களது உரிமை என்றும் மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க