அவசரகால சட்டம் நீடிக்கப்படாமை, பயங்கரவாத அமைப்புக்களின் தடைக்கு இடையூறாக அமையாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம் மற்றும் விலயான் அல் செயிலானி போன்ற மூன்று அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளமை அவசரகால சட்டத்தின் கீழ் அல்ல என்றும், இவை 1979ஆம் ஆண்டு இலக்கம் 48இன் கீழான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 27ஆவது சரத்தின் கீழாகும் என்று பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு அமைவாக அவசரகால சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மூன்று அமைப்புக்கள் மீதான தடை நீங்குவதாக பரப்பப்படும் வதந்தி அடிப்படை அற்றதாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை அவசரகால சட்டம் நீடிக்கப்படாமை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு தடையாக அமையாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
அவசரகால சட்டம் நீடிக்கப்படாமையினால், தௌஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குவதாக வெளியான செய்தியை அவர் முற்றாக நிராகரித்தார்.
வாராந்த பத்திரிகையொன்றில் இது தொடர்பாக வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 200 பேர் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதுடன் விடுவிக்கப்படுவதாக வெளியான செய்தியை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முற்றாக நிராகரித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அவசரகால சட்ட நடவடிக்கையின் கீழ் தடுத்து வைக்கப்படவில்லை.
இவர்கள் பயங்கரவாதத்தை தடுக்கும் தற்காலிக ஒழுங்குவிதி சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க