உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சவேந்திர சில்வாவை நியமித்தமை பிற்போக்குத்தனமான செயற்பாடு

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் பங்கேற்று பல்வேறு விதமான மனித இனப்படுகொலைக்கு காரணமாக இருந்து சர்வதேச சமூகத்தினால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வாவை இலங்கையினுடைய இராணுவ தளபதியாக அரசாங்கம் நியமித்து இருப்பது மிக பிற்போக்குத்தனமான செயற்பாடு என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகளாகியும் இவர் மீது பல்வேறு விதமான போர் குற்றச்சாட்டுக்கள் உலகலாவிய ரீதியில் பல வெளிநாடுகளினால் குற்றம் சாட்டப்பட்டிருந்த சூழ்நிலையில்,பல்வேறு மனித உரிமை தரப்புக்கள் இவர் மீது விசாரனைகள் நடாத்தப்பட வேண்டும் என்கின்ற வேண்டுகோள் விடுத்திருந்த சூழ் நிலையில் இந்த நியமனம் என்பது மிக மோசமானதாக காணப்படுகின்றது.
ஏனெனில் நல்லாட்சி எனும் கோசத்துடன் வந்த அரசாங்கத்தினுடைய ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களினால் மன்டேலா என்றும் காந்தி என்றும் எடுகோலாக காட்டப்பட்ட மைத்திரிபால சிரிசேன அவர்கள் இவ்வாறான நியமனத்தை செய்திருப்பது நல்லாட்சி என்கின்ற கோசத்திற்கு ஒரு மோசமான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது சர்வதேச சமூகத்தின் மத்தியில்.
இலங்கை அரசாங்கம் என்பது எப்போதும் யுத்த வெற்றிவாதம் மனோபாவத்தில் இருந்து விடுபடவில்லை என்பதையே தொடர்ச்சியாக நிதியியல் அறிக்கைகளில் எவ்வாறு பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கலோ அதே நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக யுத்த வெற்றிவாத மனோநிலையில் சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தை காண்பிக்க வேண்டும் என்கின்ற போக்கு மிகவும் மோசமான ஒரு விளைவைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கின்றது.
எனவே அரசாங்கத்தின் இவ்வாறான ஒரு போக்கும் ஜனாதிபதியினுடைய இந்த நியமனம் என்பதும் மனித உரிமை ஆர்வலர்களையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களையும், சர்வதேச  சமூகத்தையும் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்துகின்றதாகவே அமைந்திருக்கின்றது.
ஏனெனில் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்விதமான யுத்த வெற்றிவாத மனோ நிலையும் மக்களை அவ்வாறான இனவாத நிலைக்குள் தூண்டி வாக்குப்பெறக்கூடிய அடிப்படை வடிப்படை வாதமாக இவ்விதமான நியமனங்களை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
தொடர்ச்சியாக தமிழர் தரப்பினுடைய எதிர் பார்ப்பும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அனுசரனையும் இயங்குகின்ற அரசாங்கம் இவ்விதமான நகர்வை முன்னெடுத்து இருப்பது தமிழர் தரப்பிற்கு மிக மோசமான பின்னடைவையும் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதனை கருதக்கூடியதாக உள்ளது.என மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க