ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசியக்கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்த பின்னரே – அவர் தொடர்பில் ஆராய்ந்து – பேச்சு நடத்தி தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி காத்திருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தல், புதிய அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இன்று (21) மாலை கொழும்பில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ. இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், வேலுகுமார், எம். திலகராஜ், அ. அரவிந்தகுமார் உட்பட அரசியல் உயர்பீடத்தின் அங்கத்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
மேற்படி சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ,
” இரண்டு கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரை பகிரங்கமாக அறிவித்துள்ளன. ஐக்கிய தேசியக்கட்சியும் தமது முடிவை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
ஐ.தே.கவிலிருந்து எப்படியான வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பில் உரிய ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்கனவே நாம் முன்வைத்துள்ளோம். இது குறித்து இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மக்களால் கோரப்படும் வெற்றி வேட்பாளரை ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்த பின்னர் எமது மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.
அதேபோல் இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் நாம் குறியாக இருக்கின்றோம்.” என்றார்.
கருத்து தெரிவிக்க