உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது- தினேஸ்குணவர்த்தன!

அரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்த்தன வவுனியாவில் தெரிவித்தார்.

வவுனியா இரட்டைபெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவரினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்சவின் பொதுஜனபெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் ஏற்படுத்துவீர்களா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வடக்கு மக்களுடைய கட்சியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாங்கள் தொடர்ந்து சொல்லி வந்தோம்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படுகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் படி கூறியிருந்தோம்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவ்வாறு வாக்களிக்கவில்லை. அவ்வாறு வாக்களித்திருந்தால் அரசை விட்டுக்கு அனுப்பியிருக்க முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசிற்கு ஆதரவாக இருந்து ஒட்சிசன் வழங்கினால் அரசிடம் இருந்து தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பினார்கள்.

அப்படி அதற்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்பதை அவர்கள் இப்பொழுது விளங்கியிருப்பார்கள்.

மகிந்தராஜபக்சவும் அவர்களுடன் இருக்கின்ற நாங்களும் நாட்டில் உள்ள எல்லா இன மக்களையும் நோக்கி கோரிக்கைவிடுக்கின்றோம்.

இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம், புதிய நம்பிக்கையை கட்டியெழுப்பும் போராட்டம் இந்த வேலைத்திட்டத்தில் இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

அவர் இவர் என்று தனியாக நாங்கள் கதவடைத்திருக்கவில்லை. எவரும் இதில் இணைந்து கொள்ள முடியும். நாங்கள் ஒரு புதிய நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக, வீழ்ந்து கிடக்கின்ற நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து முன்செல்வதற்கு இது அவசியமாகும் என தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க