ஜோதிடம்

தொழிலும் – சனியும் -15

மிழகத்திலிருந்து குணா

டந்த இதழில் சொல்லியபடி பத்தாமிடத்தை முதலில் பார்ப்போம். பத்தாமிடத்தில் சனி என்பதை காட்டிலும் முதலில் பத்தில் கிரகங்கள் இருக்கலாமா என்று தெரிந்து கொள்வது அவசியம்.

ஏழில் கிரகங்களின்றி சுத்தமாக இருந்தால் நல்லது, பத்திலோ கிரகங்கள் இருப்பது அவசியம் என்றே ஜோதிடம் சொல்கிறது!

சரி, யார் இருந்தல் நல்லது? சுபமா, அசுபமா? குரு, சுக்கிரன், புதன், வளர் பிறை சந்திரன் சுபகிரகங்கள் என்றும் சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன் போன்றவை அசுப கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.

‘சுபம்’ என்றால் நன்மையை வழங்கக்கூடிய கிரகங்கள் ‘அசுபம்’ என்றால் தீமையை வழங்கக்கூடிய கிரகங்கள்.

அதற்காக அவர்களால் நன்மை மட்டுமே நடக்கும். இவர்களால் தீமை மட்டுமே நடக்கும் என்று நாம் வரையறையை வகுக்கவும் முடியாது!  காரணம் மிக எளிதானது. அது புரிந்தால் நம் குழப்பம் நீங்கி விடும். அனைவருக்கும் நன்மை செய்யும் தன்மையுடைய ஒருவர் இருப்பதாக வைத்துக்கொள்வோம்! உங்களுக்கும் அவரை நன்றாக தெரியும். ஆனாலும் நீங்கள் ஒருமுறைகூட அவரிடம் உதவி கேட்டதில்லை. இப்போது உங்களுக்கு நீங்கள் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளீர்கள் அது பணத்தினால் மட்டுமே தீர்க்கப்படவேண்டும். இச்சூழலில் அவரிடம் சென்று உதவி கேட்கிறீர்கள். ஆனால்  அவர் மறுத்து விடுகிறார். காரணம் நாம் கேட்ட நேரத்தில் அவரிடம் பணமில்லை! அதனால் தர முடியவில்லை. அவரை தவறாகவா நினைக்க முடியும்?

அதே சமயம் எத்தனை நல்ல தன்மை கொண்டவராக இருந்தாலும் நமக்கு உதவ முடியாதவராகி விட்டார் என்பதும் உண்மைதானே! அது போலத்தான் குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரனும்! பொதுவில் நன்மைகள் வழங்கினாலும் ஒரு சில ஜாதகர்களுக்கு நன்மைகள் வழங்க முடியாத  கிரகங்களாகி விடுகின்றன!

மற்றுமொரு உதாரணத்தினை பார்ப்போம். ஊருக்கே உபத்திரவம் செய்யும் ஒருவன். ஆனால் உங்களிடம் மட்டும் நட்பு பாராட்டுவான். உங்களுக்கு ஒரு துன்பம் என்றால் கேட்காமலே வந்து உதவுவான். கெட்டதன்மை கொண்ட அவனிடம் உங்களுக்கு இரங்கும் சுபாவமிருக்கிறதே! அவனை நாம் தவறாக கருதமுடியும்?

இதுவே சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது மற்றும் தேய் பிறை சந்திரன் இவர்களின் நிலைப்பாடு. பொதுவில் இவர்கள் தீமைகள் செய்தாலும் இவர்களால் ஆதாயம் பெறும் ஜாதகர்கள் அநேகர் உண்டு.

இதனைக்கருத்தில் கொண்டே தொழில் இடத்தை நாம் அளக்க முடியுமோ தவிர வேறு எதனாலும் முடியாது! பத்தாம் இடத்தில் ‘திக்’ பலம் பெறுவது செவ்வாயே! சுறு சுறுப்பாக வேலை செய்வது, இளவயது வெற்றி, என வாழ்க்கை பரபரப்பாக இருக்கவேண்டுமெனில் பத்தாமிட செவ்வாயே சிறப்பு!

ஆனால் சனி மந்தனாயிற்றே! பொறுமையின் சிகரமாயிற்றே! நிதானமாக வேலை செய்யும் பாங்கையே அளிப்பார்.

சனியை பொறுத்தமட்டில் பத்தாமிடமானது சுபரின் வீடாகவும், சுபரின் பார்வை பெற்று அமைந்திருந்தும் உச்சகதியிருந்தால் தரும் நன்மைகள் ஏராளம்!
ஆனால் அவர் வக்கிரமடைந்து இருக்கவும் வேண்டும்! ஏனெனில் வக்கிரமடையாத சனியிருப்பது நல்லதல்ல…..அப்படியிருந்தால் அது தந்திரத்தையே உண்டாக்கும்! இந்த வக்கிரத்தினை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விளக்குகிறேன்!

சுப இடமான பத்திலிருக்கும் சனி பெருமை தரக்கூடிய தொழில்களையே உண்டாக்கு வார். விவசாயம், அரசாங்க உயர்பதவிகள், சாஸ்திரஅறிவு கொண்டு யாகங்கள் செய்வது, எழுத்தின் புகழ் அடைதல், இருப்பு கருவிகள் தயாரிப்பது. மேன்மையான குலத்தில் பிறந்து பாரம்பரிய தொழில் புரிவது, வெளிநாட்டுவாசம், பெரும் கால்நடை பண்ணைகள் வைத்திருப்பது, உறக்கம் சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்வது போன்றவற்றில் வெற்றிகாண செய்வார்.

ஆனால் வக்கிரம் பெறாமல், அசுபர் வீட்டில் மற்றும் பகை வீட்டில் இருந்தாலோ, நீச்சம் பெற்றிருந்தாலோ இழிதொழில்கள், அடிமை தொழிலை காலமெல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம், மூச்சுவிடக்கூட நேரமற்று வேலை செய்தும் குறைந்த வருமானம் என்றும் வாழ்வை அவதிக்கு இதற்கும் மேலாக பத்தாமிட அதிபதியும், பலவீனப்பட்டால் பிறரை ஏமாற்றி பிழைப்பது, நல்ல சிந்தனையே இன்றி வாழ்வது, சட்ட விரோத செயல்கள் மூலம் வாழ்வை அபாயத்துக்கு மத்தியில் கொண்டு செல்வது அநியாய வட்டி மற்றும் அடாவடி தொழில்கள் மூலம் பிறரை கண்ணீர் விட செய்து பொருளீட்டுவது போன்ற அசுப பலன்களை அதிகம் கொடுப்பார்.

ஆக பத்தாமிட சனி சுபரால் பார்க்கப்படவேண்டும் என்பதே உள்ளீடான செய்தி! சனி பற்றற்றவர் என்பதால் ஒரு சிலர் துறவற வாழ்வையும் வாழ்வின் இறுதியில் தேர்ந்தெடுப்பர்.

பொதுவில் பத்தாமிட சனி வாழ்வின் பிற்பகுதியில் யோகத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. ஆகையால் முற்பகுதியில் வெற்றிபெறும் மனிதர்களோடுகூட நம்மை இருக்கவிடாது!
எது எப்படியானாலும் நாம் வாழ்வை நிறைவாய் வாழ்ந்தோமா என்பதை அளவிடும் இடம் பத்தாமிடமான தொழிலை வைத்துதான்! உங்களுக்கு தொழிலதிபராய் வரவேண்டுமென இலட்சியமிருந்தால் முழு பணியாளராய் வாழ்வு நகர்ந்தால் எப்படி நிறைவு கிடைக்கும்?
விமானம் ஓட்ட ஆசைபட்டவன் தள்ளு வண்டியைத் தள்ளி வாழ்வு நடத்தினால்…..நிறைவு?
படைப்பு தொழிலில் புகழ் பெற விரும்பியவன் பஞ்சு மிட்டாய் விற்றால்……நிறைவு?!
அசைவ வாடையே ஆகாத ஒருவன் அசைவ தொழிலில் இருந்தால்……எப்படி வாழ்வில் நிறைவு வரும்?  இந்த கேள்விக்கும் சனிக்கும் மிகுந்த பிணைப்பு உண்டு. இப்படிப்பட்ட கர்மா நமக்கு அமையாமல் காப்பாற்றப்படவேண்டுமெனில் சனி நம் சிந்தனைகுரிய தன்மை படைத்த கிரகத்துடன் இணக்கத்துடன் சுபர் வீட்டில்நின்று சுபரால் பார்க்கப்படவேண்டும்! இல்லையெனில் சனியின் கெடுதி ஏற்படுத்தும் தாக்கம்  அங்கிருக்கவே கூடாது! அப்படியான ஜாதகம் கொண்ட மனிதர்களே நிறைவான வாழ்க்கை வாழும் மனிதர்களென்பேன்!

என்னதான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் நிறைவான இலாபத்தை வைத்துதானே இந்த சமூகம் நம்மை எடைபோடுகின்றது? அந்த இலாபத்தைதரும் பதினோறாம் இடத்துடன் சனியை பற்றியதான விரிவான கட்டுரையை அடுத்த இதழில் நிறைவு செய்வோம்.

கருத்து தெரிவிக்க