உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் யார்? 3 மணிநேரம் பேச்சு நடத்தியும் முடிவு இல்லை!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்றைய கூட்டத்திலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் திகதியை நிர்ணயிப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான  கூட்டம் இன்று (17) முற்பகல் கொழும்பிலுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கூட்டணியின் சார்பில் பங்கேற்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாசீம், ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர், புதிய அரசியல் கூட்டணி, அதற்கான யாப்பு உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

எனினும், ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்  யார், கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் திகதி ஆகியன தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

புதிய கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியையும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வழங்குவதற்கு  பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடி ஒருவாரத்துக்குள் பெயரை அறிவிக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சிக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுவும், நாடாளுமன்றக்குழுவும் ஒரே நேரத்தில் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க