ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயார் எனவும் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ‘சஜித் பிரேமதாச’ வின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடாது – அவரை மறைமுகமாக தாக்கிபேசி கருத்துகளை முன்வைத்தார்.
” ஒருவர் தன்னை தானே ஜனாதிபதி வேட்பாளராக பிரகடனப்படுத்திகொண்டு வலம் வருகிறார்.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கறுப்பு t – shirt (ரீ செட்) , ‘denim trouser’ (டெனிம் டவுசர்) அணிந்தா மக்களை சந்திக்க மேடையேறுவது? ஒழுக்கமுள்ள தலைவன் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும்.
நாட்டு மக்களின் மாத சம்பளத்தை 50 ஆயிரம் ரூபா ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாம். இது எப்படி சாத்தியப்படும்? கள்ள நோட்டுகளை அச்சிடுவதா?
இலங்கையில் செல்வந்தர்கள் சிலரே வாழ்கின்றனர். அவர்களிடமுள்ள பணம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கூறுகின்றார். இதை எவ்வாறு செய்வது? பணத்தை கொள்ளையடித்து ஜனாதிபதியாக முடியுமா?
அதுமட்டுமல்ல தந்தையின் பெயரை விற்று சிலர் அரசியல் செய்கின்றனர். தந்தை நிறுத்திய இடத்திலிருந்து ஆரம்பிப்பேன் எனவும் கூறுகிறார்.
1980 – 80 காலப்பகுதியில் ‘தந்தை’ தான் ( ரணசிங்க பிரேமதாச) தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கினார்.
இந்திய இராணுவத்துக்கு தாக்குதல் நடத்தவே வழங்கப்பட்டது. ஆனால் அமைதிப் பேச்சு முறிவடைந்த பின்னர் அந்த ஆயுதங்களை பயன்படுத்தி எம்மை தாக்கினர்.
குறித்த ஆயுதங்களை பயன்படுத்தி – தாக்குதல் நடத்தியே மாங்குளம், கொக்குவில் ஆகிய பகுதிகளை புலிகள் கைப்பற்றினர். ஆணையிறவை சுற்றிவளைத்தனர்.
எனவே, தந்தை செய்ததை நான் செய்வேன் என கூறுவது பயங்கரமானது.” என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேவேளை, எந்த கட்டமைப்பாக இருந்தாலும் அதன் தலைமைக்கு கட்டுப்படவேண்டும். இதன்படி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பெயரிடப்படும் நபருக்கே எனது ஆதரவு.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அந்த கோரிக்கையை ஏற்று – சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” என்றும் கூறினார்.
கருத்து தெரிவிக்க