உள்நாட்டு செய்திகள்புதியவை

செய்வதைதான் சொல்வேன்! மஹிந்த தமிழில் தெரிவிப்பு

தமிழர்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளை பெற்று சமஉரிமைகளோடு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழில் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தான் செய்வதைதான் சொல்வேன் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சி எங்களுக்கு எதிரான வாக்குகளை பெற்று கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின்னர் அனைத்து விடயங்களிலும் நாடு பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இப்போது மீண்டும் நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் மீண்டும் பொறுப்பெடுக்கப்போவது 2015 நாம் அவர்களிடம் கொடுத்த நாட்டை அல்ல. 2005 ஆம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்தபோது நாடு எப்படி இருந்ததோ அப்படித்தான் தற்போதும் நாடு இருக்கின்றது.

எம்மால் மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபோது முப்பது ஆண்டு கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை.

ரயில்களில் சுதந்திரமாக கொழுப்புக்கு வரமுடியும் என்று வடக்கு மக்கள் யாரும் நினைக்கவில்லை.

கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் அவற்றை எம்மால் செய்ய முடிந்தது. அதேபோன்று எதிர்காலத்திலும் எம்மால் நாட்டுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முடியும்.

சிங்களவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து இன மக்களும் தங்களது வழிப்பாட்டுத் தலங்களில் அச்சமின்றி தங்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சூழலை ஏற்படுத்துவோம்.

மேலும் தமிழ் தலைமைகளுடன் இணைந்து இந்த நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க