” பயங்கரவாதம் , அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம் .” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” 21/4 தாக்குதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பிருக்கின்றதா என இன்னும் கண்டறியப்படவில்லை. அவ்வாறு தொடர்பிருப்பின் சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் நாம் கூட்டணி அமைக்கமாட்டோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காவிட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.
வடக்கிலுள்ள பல கட்சிகள் எங்களுடன் இணைந்துள்ளன. எனவே, எமக்கான வாக்கு வங்கி அதிகரிக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.
மஹிந்த ராஜபக்ச வெற்றி வேட்பாளரையே களமிறக்குவார். எனவே, நாட்டுக்கு சிறப்பான தலைமைத்துவம் கிடைக்கும் என்பதுடன், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வருவார்.
சர்வதேச நாடுகளுடனான உறவு பலப்படுத்தப்படும். கடந்தகாலங்களில் இடம்பெற்ற சிறு அளவிலான தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கி பயணிப்போம்.” என்றும் பஸில் கூறினார்.
கருத்து தெரிவிக்க