இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் மலையகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் கண்டி மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 வீடுகளாவது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரானா வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இன்று (07) காலை கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுதினார்.
இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி., மேலும் கூறியதாவது,
“கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றதாலேயே கடந்த காலங்களில், எனது முயற்சியால் கடுமையாகப் போராடியேனும் தோட்டப்பகுதிகளுக்கு தனிவீட்டுத் திட்டங்களைக் கொண்டுவந்தோம்.
லயன் யுகத்துக்கு முடிவு கட்டி, எங்கள் மக்களை நிலவுரிமையுடன் தனிவீடுகளில் குடியமர்த்த வேண்டும் என்பதில் நாம் குறியாக இருந்தோம் – இருந்துவருகின்றோம். அதற்காக பலவழிகளிலும் உரத்துக் குரல் எழுப்பினோம். தற்போதும் எழுப்பி வருகின்றோம்.
எனவே, மலையகத்துக்கு தனி வீட்டுத் திட்டம் கிடைப்பதற்கு கண்டி மண்ணிலிருந்து வழங்கப்பட்ட அரசியல் தலைமைத்துவத்தை – பங்களிப்பை எவரும் மறந்து செயற்படக்கூடாது.
எங்களுக்கும் உரிமை இருப்பதாலேயே ‘ வீடுகளைத் தா’ என உரிமையுடன் தட்டிக் கேட்கின்றோம்.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அதற்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதுவரையில் 3 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
இவ்வருட இறுதிக்குள் மேலும் 7 ஆயிரத்து 500 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதன்படி கண்டி மாவட்டத்தில் தனி வீடுகளை அமைப்பதற்கு போதுமானளவு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டுத்திட்டம்தான் குறைவாக கிடைக்கின்றது. இந்நிலைமை மாறவேண்டும்.
குறிப்பாக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 10 ஆயிரம் வீடுகள் மலையகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. இவ்வீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சம் கண்டி மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 500 வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இது விடயத்தில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.’’ என்றார்.
கருத்து தெரிவிக்க