உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் – ஆளுநர் சந்திப்பு

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர்   திரு.சரத் டாஷ் (Mr.Sarat Dash) அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன்,இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 6.5 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் தமது அமைப்பிடம் உள்ளதாகவும், இதனை முன்னெடுக்கும்போது எதிர்பாராத தாமதங்கள் ஏற்படுவதால் அகதிகளை அழைத்து வருவதில் தாமதங்கள் தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவித்த திரு.சரத் டோஷ், இதற்கு உதவுமாறு கௌரவ ஆளுநர் அவர்களை கேட்டுக்கொண்டார்.

இதன்போது கௌரவ ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய  அதிகாரிகளுடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை IOM நிறுவனம் மேற்கொள்ள உதவிபுரிவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, அகதிகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது இடங்களுக்கு திரும்புவதற்கு முழுமையாக உரிமை உள்ளதென்றும் அவர்கள் மீண்டும் இலங்கை திரும்பும்போது அவர்களுக்கு தேவையான வசதிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த ஆளுநர் அவர்கள் , மீண்டும் இலங்கையில் அவர்கள் அகதிகளாக வாழ ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

[ வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு ]

கருத்து தெரிவிக்க