உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபாய்; அமைச்சரவையில் முறுகல் நிலை!

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு இடையில் தர்க்க நிலைமை ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.

எனினும் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தமது அமைச்சில் இருந்து 600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முடியாது என்றும், அதனை அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சில் இருந்து ஒதுக்குமாறும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில் இந்த தொகையை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இருந்தே ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டநிலையில், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று தெரிவித்து, அமைச்சரவைக் கூட்டத்தை திகாம்பரம் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற இந்திய வீட்டுத்திட்டங்கள் ஊடாக நிரந்தரகாணிகள் வழங்கப்படக்கூடாது என்றும், அவை 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நவீன்திஸாநாயக்க யோசனை முன்வைத்திருந்தார்.

எனினும் இது கடும் எதிர்ப்பை அடுத்து நீக்கிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க