வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் பகுதிகள் திட்டமிட்ட வகையில் பேரின மக்களின் குடியேற்றம் அதிகரித்து வரும் நிலையில் தமிழர்களுக்கான இருப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியமாகியுள்ள நிலையில் தமிழர்களின் தாயக பகுதிகள் எவ்வாறு காலம் காலமாக சிங்களவர்களின் கைகளுக்கு சென்றது என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர் நவனீதன் ‘நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ நிகழ்வில் தெளிவுப்படுத்தி இருந்தார்.
இன்று நடைபெற்று கொண்டிருக்கின்ற நில அபகரிப்பு முயற்சிகள் தொடர்பாக ஒரு புரிதலை அடைவதற்கு முன்னர் இது இன்று தான் நடைபெறுகின்றதா? அல்லது வரலாற்று காலம் தொட்டு இன்று வரை எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதனை அத்தியாவசியமான ஒன்றாகும்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே இந்த நாட்டிலே வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட முறையிலேயே மிகவும் கட்டமைக்கப்பட்ட முறையிலேயே தமிழர்களுடைய இனப்பரம்பலை மாற்றியமைக்கக் கூடிய வகையிலேயே சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்திற்கு காலம் சிங்கள குடியேற்றத்திட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றது.
அந்த வகையிலேயே மிகக் குறிப்பாக 1947 ஆம் ஆண்டு அப்போதைய பிரித்தானிய அரசாங்கத்தினுடைய விவசாய அமைச்சராக இருந்திருக்க கூடிய டி.எஸ் செனநாயக்க அவர்கள் 1947ம் ஆண்டிலேயே 12 விவசாய குடியேற்றங்கள் என்ற பேரிலே 12 குடியேற்றங்களை உலர் வலயத்திலே மேற்கொள்கின்றார்.
இந்த 12 குடியேற்ற திட்டங்களுக்காகவும் கிட்டத்தட்ட 30 மில்லியன் ரூபாவை அவர் அக்காலத்திலேயே செலவளிக்கின்றார். ஒரு குடும்பத்திற்கு கிட்டத்தட்ட அவ்வளவாக செலவளிக்கப்படுகிறது என்று பார்த்தால் 10000 ரூபாவை 1947ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குடும்பத்திற்கு செலவளிக்கப்படுகின்றது என்று பார்த்தால், அந்த விவசாய அபிவிருத்திக்கு என்பதற்கு அப்பால் அவர்களுக்கு நிச்சயமாக மறைமுக நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கிறது என்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பிற்பாடு அதே டி.எஸ் செனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற கையோடு குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே பரவலாக சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்கின்றார்.
கல்லோயா திட்டத்தினூடாக அதனுடைய மிக வெளிப்படையான நோக்கம் உலர் வலயத்திற்கு நீர் பாய்ச்சுவதாக இருந்தாலும் அதன் மறைமுக நோக்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதாக இருந்திருக்கின்றது.
அதற்கு சாட்சி சொல்வது போலவே 1949 ஆம் ஆண்டு பதவியா பிரதேசத்திலேயே ஒரு சிங்கள குடியேற்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் டி.எஸ் சேனநாயக்க பேசுகின்றார் அந்த மக்கள் முன்னிலையிலேயே கூறுகின்றார் இன்று உங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேறி இந்த புதிய கிராமத்திலேயே குடிபுகுகின்ற நீங்கள் இந்த தேசத்திலே வரலாற்றிலேயே பேசப்படுவீர்கள் கடலில் அடித்துச் செல்லப்படுகின்ற மரக்குச்சிகள் கரையொதுங்கி காப்பரணாக இருப்பது போல சிங்கள மக்களுக்கு காப்பரணாக நீங்கள் இருப்பீர்கள்;
சிங்களவர்களுக்கான இறுதியுத்தம் இந்த பதவியாவிலே தான் தொடக்கப்படும். எதிர்காலத்திலே இந்த நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு பதவியாவிலே இருக்கக்கூடிய சிங்கள மக்களாகிய நீங்கள் நல்ல செய்திகளைச் சொல்லுவீர்கள் என்று தீர்க்கதரிசனத்தோடு அக்காலப் பகுதியிலேயே கூறியிருந்தார் .
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் கிழக்கு மாகாணத்தை எடுத்து பார்ப்போமாக இருந்தால் புள்ளிவிவரங்களின்படி 1891 ஆம் ஆண்டு கிழக்கினுடைய ஒட்டு மொத்த சனத்தொகையிலே நான்கு வீதமானவர்கள் தான் சிங்களவர்கள்.
இன்னும் சில தகவல்கள் அதைவிட குறைவென்றே சொல்லுகின்றது. ஆனால் உத்தியோகபூர்வ தரவின்படி நாங்கள் கூறுகின்றோம் 4.6 வீதம். இன்று உத்தியோக புள்ளிவிபரத் திணைக்களத்தினால் கொடுக்கப்பட்ட தகவலின்படி 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தகவலின்படி 23.15 வீதம்.
வெறும் நான்கு விதமாக இருந்த சிங்களவர்களின் சனத்தொகை இப்பொழுது கிழக்கு மாகாணத்திலே 25 வீதத்தை தொட்டிருக்கிறது என்றால் இது ஒரு இயற்கையான நிகழ்வல்ல.
சிங்களத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் நன்கு திட்டமிட்ட முறையிலேயே மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் காரணமாக தமிழர்களுடைய இருப்பு கிழக்கிலே நலினப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த முயற்சி இப்போது வேகமாக வடக்கிலே இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
வடக்கினுடைய சிங்கள குடியேற்றங்களை வரலாற்றை நாங்கள் பார்க்கின்றபோது வடக்கில் குறிப்பாக வவுனியாவிலே ஏற்கனவே அனுராதபுரத்திலே குடியேற்றப்பட்ட சில குடும்பங்களுக்கு அப்பால் வடக்கில் உடைய சிங்கள குடியேற்ற நிகழ்ச்சி நிரல் என்பது 1984 காலப்பகுதியில் தான் முனைப்பு பெறுகிறது.
வடமாகாணத்தின் இதயபூமியாக இருக்கக்கூடிய வடக்கையும், கிழக்கையும் பிரிக்கின்ற அந்த இதய பூமியிலேயே இருக்கக்கூடிய டொலர்பாம் ,கென்பாம், நாகர்பண்ணை என்று சொல்லப்படுகின்ற வளமான பண்ணைகள் தமிழர்களுக்குச் சொந்தமான 16 பண்ணைகள் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட வளமான 16 பண்ணைகளிலிருந்து எம்மவர்கள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி போன்ற எல்லைப்புற கிராமங்கள் வடக்கையும் , கிழக்கையும் இணைக்க கூடிய பாலமாக இருக்க கூடிய கிராம மக்கள் 84 ஆம் ஆண்டு வெளியேற்றப்படுகிறார்கள். இவை அனைத்தும் ஒரு சாதாரணமான ஒரு தொடர்புடைய நிகழ்வுகளல்ல சிங்களப் பேரினவாதத்தினால் மிகவும் நன்கு திட்டமிடப்பட்ட முறையிலே அந்த மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
இராணுவ மயப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் அரங்கேறி இருக்கின்றது. குடியேற்றங்களுக்கு பின்னால் இராணுவ நிகழ்ச்சிகள் இருக்கிறது. என்பதற்கு சில உதாரணங்களை நான் கூற விரும்புகிறேன். இப்போது நாங்கள் வெலிஓயா என்று சொல்லுகின்ற மணலாறு பிரதேச செயலகப் பிரிவிலே உள்ள கிராமங்களின் பெயர்களை எடுத்து பாருங்கள் ஜானகபுர அப்பிரதேசத்தின் உடைய இராணுவத்தளபதியினுடைய பெயர் ஜனகபெரேரா- ஜானகபுர அவருடைய மனைவியின் பெயர் கல்யாணி- நவகல்யாணபுர, அவருடைய மகன் சம்பத்-சம்பத்நுவர, இப்போது அண்மையிலே எங்கள் ஐயாவினுடைய பெயர் நாமல்- நாமல்கம இவையெல்லாம் புதிய கிராமங்கள் எங்களுடைய தாயகத்தை துண்டாடுவதை நோக்காக கொண்ட கிராமங்கள்.
உண்மையிலேயே அவர்கள் எதிர்பார்த்த வேகத்திலே முன்னேற முடியாமல் போன சூழ்நிலையிலையே 2009 ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மிகவும் முழுமூச்சிலே இப்பிரதேசங்களிலே சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உண்மையிலே ஆரம்பத்திலே கிழக்கு மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்ட அனேகமான சிங்கள குடியேற்றத்திட்டங்கள் நீர்ப்பாசனத் திட்டங்கள் என்ற போர்வையிலேயே மேற்கொள்ளப்பட்டது. அது மகாவலி திட்டமாக இருக்கலாம், கல்லோயா திட்டமாக இருக்கலாம், மாதுஓயா திட்டமாக இருக்கலாம் நீர்ப்பாசனத் திட்டங்கள் என்ற வடிவிலேயே கிழக்கு மாகாணத்திலே சனத்தொகை மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அப்பால் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் இவ்வாறு மத்திய அரசினுடைய ஆளுகைக்கு உட்பட்ட திணைக்களங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு அமைச்சின் ராணுவம் இணைந்து நன்கு திட்டமிட்ட முறையிலேயே வடக்கினுடைய சனத்தொகையை மாற்றியமைப்பதற்காக சகல திட்டங்களும் அரங்கேறி வருகின்றது.
மகாவலி எல் வலையத்தின் கீழ் அவர்களுடைய அறிக்கைகளின்படி மகாவலி எல் வலயத்திலேயே வவுனியா , திருகோணமலையினுடைய ஒரு பகுதி, முல்லைத்தீவினுடைய ஒரு பகுதி அனுராதபுரத்தினுடைய ஒரு பகுதியை உள்ளடக்கிய வகையிலேயே ஒரு லட்சத்து 99 ஆயிரம் ஹெக்டேர் நிலம் அபிவிருத்தி செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான ஹெக்டேர் நிலப்பரப்பில் 46 ஆயிரம் ஹெக்டேர் நிலம் ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றுவிட்டன.
இந்த குடியேற்றங்கள் வவுனியா மாவட்டத்தையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் ஒன்றாக பாதித்திருக்கிறது. என்பதை ஆராய வேண்டியது அவசியமாக இருக்கின்றது. போர் முடிந்த கையோடு ஒன்பது சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 9 கிராமங்கள் வெலியோயா என்கின்ற தனி ஒரு பிரதேச செயலகமாக உருவாக்கப்பட்டு அது முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப்படுகின்றது.
7017 சிங்களவர்கள் பதிவுகளின்படி அப்பிரதேசத்தில் குடியேற்றபட்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலக பிரிவே போருக்கு பின்னால் உருவாகியிருக்கின்றது.
வவுனியாவை பொறுத்தவரையிலே ஏற்கனவே வவுனியா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவிலே இருக்கக்கூடிய 14028 சிங்களவர்களுக்கு மேலதிகமாக வவுனியா தமிழ் பிரதேச செயலகத்தோடு அண்மையிலே கள்ளிகுளம் என்ற கிராம சேவையாளர் பிரிவுகளோடு மகாவலி திட்டத்தினூடாக 4 புதிதாக கிராமங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. நாமல்கம, நந்தமித்ரகம, சங்கமித்தகம என்று நான்கு புதிய கிராமம் இணைக்கப்பட்டு 1200 சிங்களக் குடும்பங்கள் வவுனியா தமிழ் பிரதேச செயலகப்பிரிவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு மேலதிகமாக வவுனியா வடக்கு நெடுங்கேணியை பொறுத்தவரையிலே வோகஸ்வெவ ஒன்று என்ற கிராம சேவையாளர் பிரிவு வெடிவைத்தகல் கிராம சேவையாளர் பிரிவோடு இணைக்கப்பட்டு 817 குடும்பங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றது.
இன்று நீங்கள் வவுனியா வடக்கு பிரதேச சபையின் உடைய அரசியல் பலத்தை பார்க்கின்ற போது அவ்வாறு கிட்டத்தட்ட ஒரு வடிவம். வவுனியா வடக்கு எவ்வாறு பறி போய் இருக்கின்றது என்பதை ஆராய்கின்ற போது சிங்களக் குடியேற்றத்தினுடைய தாக்கத்தை நன்கு உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
உண்மையிலேயே பாரம்பரியமான தமிழ் கிராமம் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவிலே இன்று தமிழர்கள் பெரும்பான்மையற்ற ஒரு பிரதேச சபையாக மாற்றி இருக்கிறார்கள்.
கருத்து தெரிவிக்க