வடக்கு கிழக்கில் இராணுவ மயப்படுத்தப்பட்டே குடியேற்றங்கள் அரங்கேறி இருக்கின்றது என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர் நவனீதன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (21.7.2019) நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் எனும் கருத்தாய்வு நிகழ்வில் கருது தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இடம்பெறும் நில அபகரிப்பு முயற்சிகள் தொடர்பாக பரந்தளவில் சிந்திப்பது அவசியமாகும்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே இந்த நாட்டிலே வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட முறையிலேயே பேரினவாதத் தலைவர்களால் சிங்கள குடியேற்றத்திட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றது.
அப்போதைய பிரித்தானிய அரசாங்கத்தினுடைய விவசாய அமைச்சரான டி.எஸ் செனநாயக்க 1947ம் ஆண்டிலேயே 12 விவசாய குடியேற்றங்கள் என்ற பேரிலே 12 குடியேற்றங்களை உலர் வலயத்திலே மேற்கொண்டார்.
சுதந்திரம் அடைந்ததற்கு பிற்பாடு அதே டி.எஸ் செனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற கையோடு கிழக்கு மாகாணத்திலே பரவலாக சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டார்.
கல்லோயா திட்டத்தினூடாக அதனுடைய மிக வெளிப்படையான நோக்கம் உலர் வலயத்திற்கு நீர் பாய்ச்சுவதாக இருந்தாலும் அதன் மறைமுக நோக்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதாக இருந்திருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை புள்ளிவிவரங்களின்படி 1891 ஆம் ஆண்டு கிழக்கினுடைய ஒட்டு மொத்த சனத்தொகையிலே நான்கு வீதமானவர்கள் தான் சிங்களவர்கள். இப்பொழுது கிழக்கு மாகாணத்திலே 25 வீதத்தை தொட்டிருக்கிறது.
அந்த முயற்சி இப்போது வேகமாக வடக்கிலே இடம்பெற்று கொண்டிருக்கின்றது. உண்மையிலேயே பாரம்பரியமான தமிழ் கிராமம் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவிலே இன்று தமிழர்கள் பெரும்பான்மையற்ற ஒரு பிரதேச சபையாக மாற்றி இருக்கிறார்கள் என மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க