இந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதில், இலங்கை துறைமுக அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
”காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், அதுபோன்று கொழும்பு- தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், இரண்டு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம், இருதரப்பு வணிக செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் பௌத்த சுற்றுலாப் பயணிகளுக்கு இது சாதகமாக இருக்கும் எனவும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் வாழும் சமூகங்களுக்கு வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் தெருவித்திருக்கின்றார்.
அத்துடன், சீமெந்து போன்ற மொத்த பொருட்களை நெடுஞ்சாலை மற்றும் தொடருந்து மூலம் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவைக் குறைக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
2011இல், தூத்துக்குடி- கொழும்பு இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், வணிக ரீதியாக வெற்றியளிக்காததால், இந்த கப்பல் சேவையை நடத்திய தனியார் நிறுவனம், அதனை நிறுத்தியது.
தற்போது, இலங்கை அரசாங்கம் காங்கேசன்துறை துறைமுகத்தை தரமுயர்த்தி வருகின்றது. இதற்காக, இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து 45.27 மில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க