21/4 தாக்குதல்களுக்கு பின்னர் ஆட்டம்கண்ட இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுவருகின்றது.
இதன்படி நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 200 வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இலங்கை வருகின்றனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டுடன் இக்காலப்பகுதியை ஒப்பிடுகையில் பயணிகளின் வருகை வீதம் 54 சதவீதத்தால் குறைவடைந்துள்ள போதிலும், கடந்த ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுலை மாத வளர்ச்சி வேகமானது திருப்தியளிப்பதாகவும் மேற்படி சபை குறிப்பிட்டுள்ளது.
21/4 தாக்குதல்களையடுத்து சர்வதேச நாடுகள் இலங்கைமீது பயணத்தடையை விதித்திருந்தன.
சுமார் 45 நாட்களுக்கு பின்னரே அத்தடையை தளர்த்துவதற்கு சர்வதேச சமூகம் கட்டங்கட்டமாக நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இலங்கையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் நம்பிக்கையுடன் வருகைதரலாம் என வெளிவிவகார மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சுகள் அண்மையில் விசேட அறிவிப்புகளை விடுத்திருந்தன.
கருத்து தெரிவிக்க