உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஏப்ரல் 21: தாஜ் சமுத்ராவில் இருந்த வெளிநாட்டவர்கள் யார்?

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின்போது கொழும்பு தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையின் அரசியல்வாதிகள் ஆகியோர் யார் என்பதை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்தக்கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த அவர், இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

குறித்த ஆட்களை கண்டுபிடித்தால் தாக்குதல்களின் பின்னணியை அறிந்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்தக் தாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடுகளின் சக்திகள் இருந்தன என்பதையும் அறிந்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய விருந்தகங்கள் தாக்குதல்களுக்கு உள்ளானபோது ஏன் அந்த விருந்தகம் மாத்திரம் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை.

குறித்த நேரத்தில் விருந்தகத்தில் சக்திமிக்க நாடுகளின் சிலரும் உள்ளுர் அரசியல்வாதிகளும் இருந்தனர் என்ற காரணத்துக்காகவே அந்த விருந்தகம் தாக்கப்படவில்லை.

எனவே இது தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்று தயாசிறி கேட்டுக்கொண்டார்.

ஸஹ்ரானை பயன்படுத்தி சில வெளிநாட்டு சக்திகள் நாட்டின் அரசியல் நிலையை மாற்றியமைக்க முனைந்த அடிப்படையிலேயே இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஸஹ்ரானுக்கு கிடைத்த நிதிகள் இந்தியாவில் இருந்தா? அல்லது வேறு எங்கிருந்தும் வந்ததா? என்பதை விசாரணைகளின் மூலம் கண்டறியமுடியும் என்றும் ஜெயசேகர குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க