நாடு முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
ஆய்வு குறித்து போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆலோசகர், டொக்டர் சமந்த கிதலவாரச்சி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர், ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சுமார் 3 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வின்படி 24,211 பேர் பல்வேறு வகையான போதை வில்லைகளைப் பயன்படுத்துவதாக டொக்டர் சமந்த கிதலவாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்திலேயே போதைப்பொருளுக்கு அடிமையானோர் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
ஆய்வின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்கும் கையளிக்கப்பட்டதாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க