உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஒரே கட்சியிலிருந்தே ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவு செய்யப்பட வேண்டும்..

தேசிய கட்சிகளுக்கு பாடம் புகட்டிய பெறுமை மலையக மக்கள் முன்னணிக்கே உண்டு, மலையக மக்கள் முன்னணியின் அமரர்.சந்திரசேகரன் தன்னுடைய ஒரு ஆசனத்தினால் ஒரு அரசாங்கத்தையே அமைக்க முடியும் என செய்து காட்டியவர்.

எனவே எந்த ஒரு தேசிய கட்சியும் மலையக மக்கள் முன்னணியை மறந்து செயற்பட முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒலிரூட் பிரதேசத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும், சென்.கிளயார் ஸ்டேலின் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கும், தலா ஒரு குடும்பத்திற்கு 20,000 ரூபா வீதம் மொத்தமாக 30 குடும்பங்களுக்கு இன்று அமைச்சர் இராதாகிருஷ்ணனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் டக்ளஸ் நாணயக்கார, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு தனி இடம் இருக்கின்றது அதற்கு காரணம் மலையகத்தின் அபிவிருத்தி, மலையக மக்களின் உரிமை இவற்றை முதலில் வெளிப்படுத்தியது மலையக மக்கள் முன்னணி.

நாங்கள் எந்த அரசாங்கத்தோடு இணைந்தாலும் அது மலையக மக்களுக்காக மாத்திரமே அந்த அடிப்படையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது இன்று இந்த அமைப்பின் மூலமாக நாம் பல வெற்றிகளை பெற்று வருகின்றோம்.

அமைச்சர் திகாம்பரம், வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

நான் கல்வி, பாதை அபிவிருத்தி உட்பட இன்னும் பல அபிவிருத்திகளை செய்து வருகின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் பாதை அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்திகளை செய்து வருகின்றார்.

இவை அனைத்தும் எங்களுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

எந்த காரணம் கொண்டும் இந்த முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது.

நாங்கள் எதிர்காலத்திலும் முற்போக்கு கூட்டணி ஊடாகவே தேர்தல்களை சந்திப்போம்.

ஐக்கிய தேசிய கட்சி எங்களுடைய கட்சியில் ஜனாதிபதி பிரதமரும் வர வேண்டும் என கூறுகின்றார்கள். ஆனால் என்னை பொறுத்த வரை ஒரே கட்சியிலிருந்தே ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவு செய்யப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் இன்று நாங்கள் சந்திக்கின்ற இந்த பிரச்சினைக்கு என்றுமே தீர்வு காண முடியாது அத்தோடு நாட்டை அபிவிருத்தி செய்யவும் முடியாது.

எனவே ஒரே கட்சியிலிருந்து ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவு செய்யப்பட்டால் நாட்டுக்கும் மக்களுக்கும் அது நன்மையாகவே அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க