உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பிரதமர் தலைமையில் கேகாலை மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள்

ருவன்வெல்லை நீர் விநியோக செயற்றிட்டத்தை ஆரம்பிப்பது உட்பட ருவன்வெல்லை மற்றும் தெரனியகல பிரதேசங்களில் பல அபிவிருத்தி செயற்றிட்டங்களை ஆரம்பிக்கும் மற்றும் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

ருவன்வெல்ல நீர்விநியோகத் திட்டத்தின் மூலம் ருவன்வெல்லை எட்டியாந்தோட்டை புளத்கொஹூப்பிட்டிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 20 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த 35 ஆயிரம் மக்கள் தூய குடிநீரை பெறவுள்ளனர்.

மூன்று வருடங்களில் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ள இந்த செயற்றிட்டத்திற்காக அரசாங்கத்தின் முதலீடு மற்றும் கொரியாவின் எக்ஸிம் வங்கியின் உதவியின் மூலம் ஆறாயிரத்து 241 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஆறாயிரத்து 500 பேருக்கு நீர் இணைப்புக்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ருவன்வெல்லை கன்னந்தோட்ட சுலைமானியா பாடசாலையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தல், ருவன்வெல்லை நகரின் பஸ் நிலையம் மற்றும் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்தல் ஆகிய நிகழ்வுகள் இன்று காலை இடம்பெறவுள்ளன.

ருவன்வெல்லை ராஜசிங்க கல்லூரியின் புதிய நிர்வாக கட்டிடம் கொஸ்கஹகந்த பாடசாலையின் புதிய மூன்று மாடிக் கட்டிடம் மற்றும் தெரனியகல சிறிசமன் தேசிய பாடசாலையின் புதிய கட்டிடம் என்பனவற்றை திறந்து வைத்தல், பஸ் நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தல் ஆகிய நிகழ்வுகளும் இன்று பிற்பகல் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளன.

கருத்து தெரிவிக்க