உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்ததால் விவசாயிகள் பாதிப்பு

தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

இதனால் நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் நீரைப் பெற்று மேற்கொள்ளப்பட்டுவரும் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உன்னிச்சை குளத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல நகரப் பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் செய்யப்படுகின்ற அதேவேளை, அக்குளத்தின் வலதுகை, இடதுகை வாய்க்கால்கள் ஊடாக வயல் நிலங்களுக்கும், நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வருகின்றது.

ஜனவரி மாத காலப்பகுதியில் 33அடி நீர்மட்டம் இருந்தபோதிலும் தற்போது சுமார் 6அடி அளவிலேயே நீர் மட்டம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடத்தின் ஆரம்பத்திலும் அதற்குப் பின்னரான காலங்களிலும் போதியளவு மழை பெய்யாததும் அதனால் ஏற்பட்ட கடும் வறட்சியுமே இந்த நிலைமைக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படாமல் நீரை பகிர்ந்து வழங்குவது என அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்த போதிலும் தற்போது விவசாயத்திற்கு போதியளவு நீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கடந்த பல வருடங்களுக்குப் பின்னர் உன்னிச்சைக் குளத்தில் இவ்வாறு நீர் மட்டம் குறைந்துள்ளதாக பிரதேச மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க