நாட்டின் முதலாவது பண்டைய தொழிநுட்ப நூதனசாலையும் நூலகமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பொலன்னறுவையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
நவீன யுகத்திற்கு பொருத்தமான நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி குறித்த நூலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மனித இனத்திடமிருந்த பண்டைய தொழிநுட்பத்தை பற்றி இன்றுள்ள மக்களுக்கு விளக்கும் வகையில் இந்த தொல்பொருள் நிலையம் அமையப் பெற்றிருப்பதுடன், இது அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய திட்டமாகும்.
பண்டைய சுதேச தொழிநுட்பத்திற்குரிய தொல்பொருட்களை திரட்டி, அவற்றை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்குவதே இந்த தொல்பொருள் நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கமாகும்.
நவீன தொழிநுட்ப யுகத்தின் தொல்பொருள் நிலையமொன்றில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் இந்த தொல்பொருள் நிலையம் கொண்டுள்ளது.
மூன்று மாடிகளைக் கொண்ட இந்த நிலையத்தின் கீழ்த் தளத்தில் பொலன்னறுவை யுகம் பற்றிய சிறு அறிமுகம் வழங்கப்பட்டு அந்த யுகத்தின் தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
முதலாவது கூடம் பொலன்னறுவை யுகம் பற்றியும் இரண்டாவது கூடம் வரலாற்றுக்கு முந்திய தொழிநுட்பம் பற்றிய விபரங்களையும் மூன்றாவது கூடம் மட்பாண்டங்கள், உலோக தொழிநுட்பங்களையும் நான்காவது கூடம் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான விபரங்களையும் கொண்டுள்ளது.
முதலாவது மாடியில் கட்டிடத் தொழிநுட்பம், சுவரோவியங்கள், மரத்தொழிநுட்பம், புடவைகள் மற்றும் கணித தொழிநுட்பம் ஆகிய கூடங்களைக் கொண்டுள்ளது.
முதலாவது மாடி விரிவுரை மண்டபம், செயற்படுத்தல் கூடம், புத்தாக்க நிலையம் மற்றும் நினைவு வெளியீடுகளை விற்பனை செய்யும் கூடமொன்றையும் கொண்டுள்ளது.
இரண்டாவது மாடி நூலகம் மற்றும் விரிவுரை மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புத்தாக்க கூடம் சீகிரிய, ஜேத்தவன ஆகிய பண்டைய இடங்களின் முப்பரிமாண காட்சிகளைக் கொண்டுள்ளதுடன், வெளிநாட்டு தொல்பொருள் நிலையங்களைப்போன்று இந்த தொல்பொருள் நிலையங்களில் நேரடியாக புகைப்படங்களை எடுக்கக்கூடிய வகையில் தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகளையும் கொண்ட கேட்போர்கூடம், புத்தக விற்பனை நிலையம், நினைவுப்பொருட்கள், விற்பனை நிலையம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நினைவுப்பொருட்கள் அனைத்தும் ஓலைகளில் செய்யப்பட்டதாகும்.
இந்த தொழிநுட்ப தொல்பொருள் நிலையத்திலுள்ள நூல் நிலையம் கொழும்பு தேசிய தொல்பொருள் நிலைய நூலகத்துடன் தொடர்புபட்டதாகும் என்பதுடன், அங்கு நூல்களை வழங்கும் பிரிவொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுய கற்றல் மும்மொழிகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இந்த தொல்பொருள் நிலையம் வெளிநாட்டவர்களுக்கும் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சாதாரண மக்களும் பெருமளவு பயன்படக்கூடிய வகையில் இந்த நிலையம் அமைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ என்ற எண்ணகருவின் பேரில் மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் இந்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த திட்டத்திற்கக 900 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க