அரசியல் கைதிகள் விடயத்தில் காலத்திற்கு காலம் வாக்குறுதிகளை வழங்கிய பிரதமா் ரணில் விக்ரமசிங்க அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஆக்கபூா்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக் கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
அரசியல் கைதிகளது பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டு ஒரு புதிய ஜனாதிபதியைக் கொண்டு வந்த சூழ்நிலையிலே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை இன்னமும் 94 அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுடைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமே ஒழிய, அடுத்த 2020 இற்குக் கூட கொண்டுபோக முடியாது. அதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து இந்தப் பிரச்சினையை தீர்க்க முன்னவரவேண்டும். அண்மைக்காலங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சகலருக்கும் புனர்வாழ்வு வழங்கப்படும் என்று கூறினார். இவையெல்லாம் வெறும் வாக்குறுதிகளாகப் போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. இதனைப்போல ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட்டபோதும், அதன் பின்னரும் தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் எனக் கூறியவர் ஆனால் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. ஆகவே இது சம்பந்தமான ஒரு வேண்டுகோளை ஜனாதிபதிக்கு நான் அனுப்பிவைத்துள்ளேன். இதில் ஜனாதிபதியைக் கேட்டிருக்கின்ற வியடம், நீங்கள் உங்களைக் கொல்ல வந்தவரை மன்னித்து விடுதலை செய்தீர்கள். அண்மையில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறையில் இருந்த பௌத்த பிக்குவை விடுதலை செய்தீர்கள். மேலும் ஆனந்த சுதாகரன் என்ற கைதியைும் விடுதலை செய்வதாக கூறியிருந்தீர்கள். மேலும், நீங்கள் அமைச்சராக இருந்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 11000 தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்திருந்தார்.
இந்த வகையில் மேற்முறையீட்டுக் காலம் முடிவடைந்த நிலையில் உள்ள 36 அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். மீதி 14 பேரும் மேன்முறையீட்டை வாபஸ் பெறும் இடத்து பொதுமன்னிப்பை நீங்கள் வழங்க முடியும். மேலும் 45 பேருடைய வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்ற நிலையில்,15 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கின்றவர்களை முன்னுரிமையின் அடிப்படையில் மன்னிப்பு அழித்து விடுதலை செய்யப்படல் வேண்டும்.
10 ஆண்டுகள் தொடக்கம் 15 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கின்றவர்களை குறுகிய கால புனர்வாழ்வை வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
ஏனையவர்களை நீண்டகால புனர்வாழ்வின் அடிப்படையில் விடுதலை செய்து இந்த அரசியல் கைதிகளுடைய விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற வேண்டுகோளை நான் விடுத்திருக்கின்றேன். ஆகவே, இந்த அடிப்படையிலே இந்த விடயத்தை நீங்கள் அணுகாவிட்டால் இந்த மாதம் நடுப்பகுதியில் அரசியல் கைதிகள் சிலர் சிறையிலே சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப் போகின்றார்கள். அந்தளவிற்கு விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த விரக்தி நாட்டிற்கு நல்லதல்ல. ஆகவே உடனடியாக பொறுப்புள்ள ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து இந்த அரசியல் கைதிகள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இதேவேளை, இதனுடைய பிரதிகளை பிரதமர், எதிர்கட்சித் தலைவருக்கும், நீதியமைச்சருக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும், வடமாகாண ஆளுநருக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் உட்பட 10 பேருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.
கருத்து தெரிவிக்க