உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

’21/4 தாக்குதலுடன் போதைப்பொருள் வியாபாரிகளும் தொடர்பு’

” மரண தண்டனை விவகாரத்தை மையப்படுத்தி சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துவருகின்றன. ஆனால், ஒரு நாட்டில் இறைமையில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் கிடையாது.”

இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் தற்போது (01) நடைபெற்றுவருகின்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

” போதைப் பொருட்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அழிப்பதல் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையாளர்கள் தீவிரம்காட்டிவருகின்றனர். அரசியலிலும் அவர்கள் தாக்கத்தை செலுத்துகின்றனர்.

இலங்கையில் வாழும்  குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியே போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு தலைமை வகிக்க முடிவு செய்தேன்.

இன்று மரண தண்டனை தொடர்பில் அனைவரும் கதைக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்கூட அழைப்பை ஏற்படுத்தினார். ஆனால், என் நாட்டை மீட்பதற்கு கடுமையான சட்டங்கள் அவசியம் என சுட்டிக்காட்டினேன்.

அத்துடன், மரண  தண்டனையானது தமது கட்சியின் கொள்கைக்கு முரணானது என தலைவர்       ( பிரதமர் ரணில் விக்கிரமசிங்க) ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் கட்சியின் கொள்கையை அவர்  பின்பற்றியிருந்தால் நாடு இந்நிலைமைக்கு வந்திருக்காது.

எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். சர்வதேச அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துவருகின்றன. என்னை தீயவராக அடையாளப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.

மரண தண்டனையை அமுல்படுத்தினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இது இலங்கைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். இறைமையில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

அதேபோல் 21/4 தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வியாபாரிகளும் தொடர்புபட்டிருக்கலாம்.” என்றும் ஜனாதிபதி கூறினார்.

கருத்து தெரிவிக்க