ஜோதிடம்

அரக்கனும் தேவனாவான்! -9

தமிழகத்திலிருந்து குணா

வட்டிக்கு கடன் கொடுக்கின்றவன் மிகுந்த கருணையோடு இருந்தால், கடனை வசூலிக்க முடியாது.

அப்படிதான் அஷ்டம் சனியின் வேலைகளும்….! நாம் முன் சென்ற பிறவிகளில் மற்றவர்களுக்கு செய்த தீங்குகளை துளியளவும் பாக்கி வைக்காமல் கொடுக்க கூடியவரே சனிபகவான்!

எல்லாம் கணக்குதான்..கணக்கில் கருணைக்கு இடமேது? ஊர் கூடி சபித்த பின்னே நீதிமன்றமேறிய  ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல் தப்பினால் அது நீதிமன்றமாகாது…அநீதி மன்றமாகி விடும்!
தண்டனைக்கு ஆளாகும் குற்றவாளியும், அவரது குடும்பத்தாரும் வேண்டுமானால் நீதிபதியை தூற்றலாம். ஆனால் ஊர்போற்றும்.
இது போன்று நாம் அஷ்டமசனியால் தண்டனை பெறும்போது நடப்பதே இல்லை…

முற்பிறப்புகளில் நாம் செய்ததீமைகள் எவருக்கு தெரியும்! அதனால்தான் ஊரும் நம்முடன்சேர்ந்து ஒப்பாரி வைக்கிறது… தீர்ப்பை ஏசுகிறது? ஆண்டவனுக்கும் சேர்த்து அர்ச்சனை நடக்கிறது.
அதனால்தான் நல்லவர்கள்எல்லாம் துயரப்படுகிறவர்கள்போலவும், கெட்டவர்கள் எல்லாம் வாழ்வாங்கு வாழ்கின்றவர்கள் போலவும் ஒரு பிம்பமேற்படுகிறது!

உண்மையில் அவரவர் முற்பிறப்புகளில் செய்த நன்மை – தீமைகளின் விளைவுகளே என்பதை யாரும் அறியார்! எத்தனை நேர்மையானவராய், உத்தமராய், நீதிமானாய், சக்தி படைத்தவராய் இருந்தாலும்முற்பிறப்புகளின் விளைவால் ஏற்பட்ட கர்மாவை மாற்றுவது என்பது மணலில் கயிறு திரிக்கும் விஷயமே என்பதை மகாபாரதத்தில் வரும் விதுரர்கதாப்பாத்திரம் உணர்த்தும். விதுரர், திருதுராஷ்டிரனுக்கு தம்பியும், துரியோதனனுக்கு சிற்றப்பாவும் ஆவார். ‘விதுர நீதி’ என்று நீதியே அவரது பெயரால் போற்றப்பட்டது என்றாலும், தன் கௌரவ இனமே அழியப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்தும்கூட, எதையுமே தடுக்க முடியாமல் தவித்து கதறிய சுத்த ஆத்மா அவருடையது! நீதிமான் விதுரர்குலமான கௌரவர்கள் அழிந்தார்கள்.
பாண்டவர்குலம் தலைத்தோங்கி செழித்தது!

அந்த விதுரர் யார் தெரியுமா?

எமதர்மராஜன்! அவர் ஏன் இப்படி ஒரு பிறப்பெடுக்க வேண்டும்?

ஒரு சிறிய கதை!
மாண்டவ்ய மகரிஷி என்ற முனிவரொருவர்எந்த உயிருக்கும் தீங்கு செய்யாது, காருண்யத்தை கடைபிடித்து தவமிருந்து
வரும் வேளையில், ஒரு திருட்டு பழி அவர்மீது சுமத்தப்படுகிறது. அதன்காரணமாக அவர்கழுமரமேற்றப்படுகிறார்!

கழு மரத்தின் ஒரு பக்கத்தை மிகுந்த கூராக்கி அதன்மீது ஒரு மனிதனை அமர வைப்பதே ‘கழுமறமேற்றும்’ கொடிய தண்டனையாகும்.  ஒருவரை அதில் அமர வைத்தால் சில மணித்துளிகளில் இரண்டாக பிளந்து போவார்என்றால் எவ்வளவு கொடிது என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

ஆனால் ஒரு நாளாகியும் மாண்டவ்ய மகரிஷிக்கு ஒன்றும் ஆகவில்லை… அவரது தவ வலிமையை உணர்ந்த  மன்னன் நடந்த  தவறுக்காக மன்னிப்பு கேட்டான்.  அவரை மன்னித்த மகரிஷி தன் சக்தியால் எமலோகம் சென்று எமதர்மராஜனிடம் நடத்தவற்றுக்கு விளக்கம் கேட்டார்! அதற்கு எமன், ‘சிறுவயதில் நீங்கள் காட்டில் ஒரு பூச்சியை பிடித்து, ஊசியால் குத்தி சித்திரவதை செய்ததற்கு பதிலாக இப்படி நிகழ்ந்தது’ என்றுகூற மாண்டவ்ய மகரிஷி கோபம் கொள்கிறார். அறியாத வயதில் தெரியாமல் நான் செய்த பிழைக்கு இவ்வளவு கொடிய தண்டனை வழங்கிய நீதிமானே…! இப்போதே பூவுலகில் நீ மனிதப் பிறப்பெடுப்பாய்…
உன்னை நீதிமான் என்று ஊரே போற்றும். ஆனால் உன் இனம் அதர்மத்தின் வழி நடந்து கூண்டோடு அழிந்து போகும். அதை பார்த்து, பார்த்து வாழ்நாள் முழுக்க துயரப்படுவாய்!’ என்று சபிக்கிறார். அதனால்தான் கௌரவர்கள் முற்றிலும் அழியும்வரை பார்த்து துயரத்தை அனுபவித்துவிட்டு பின் உயிர்துறந்தவரே ‘விதுரன்’ என்று பிறப்பெடுத்த எமதர்மராஜன்!

ஒரு சாபமே இவ்வளவு கொடிய ஒரு பிறப்பை தோற்றுவிக்கும் என்றால் பல்வேறு பிறவிகளில் நாம் எத்தனை தீமைகள் செய்திருப்போம். எத்தனை சாபங்கள் பெற்றிருப்போம் என்பதை அஷ்டம சனியின் காலம் வரும் போது தான் நாம் உணர முடியும்! சரி, இது ஏன் அஷ்டம சனியில் நடக்க வேண்டும்? சனி பகவானுக்கு விஷேச பார்வைகள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது.

எல்லா கிரகங்களுக்கும் 7 ஆம் பார்வை பொதுவானது. சனிக்கு 3, 10 ஆம் பார்வைகள் விஷேசமானது! ஆக, எட்டில் நிற்கும் சனி தன் 3 ஆம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும் 7 ஆம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தையும், 10 ஆம் பார்வையால் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

‘சனி பார்க்கும் இடங்கள் பாழ்’ என்பது ஜோதிட மொழி!
இந்த மொழியை, பிற இடங்களை காட்டிலும் நூறு சதவிகிதம் நிறைவேற்றுகிறது எட்டாமிடமான
அஷ்டம சனி!

என்ன ஒரு சூட்சமம் பாருங்கள்…
எட்டிலிருக்கும் சனி பார்ப்பது 10,2, 5 ஆமிடங்களை! நமது பூர்வ புண்ணிய புத்திரஸ்தானம் பாதிக்கப்படுவதால் நம்
அறிவாலோ – பக்குவத்தாலோ தடுக்க இயலாத ஆபத்துகள் அஷ்டம சனியால் வாழ்வில் நுழைகிறது.அதனால் பத்தாமிடமான ஜீவன ஸ்தானமாகிய தொழில் பாதிக்கப்படுகிறது. வருமானமில்லாத ஜீவனம் நடந்தால் நம் வாக்கும், தனமும், குடும்பமும் பாதிக்கப்படுகிறது.
பிறகெப்படி வாழ்வு நிம்மதியுடன் இருக்கும்? திருதுராஷ்டிரன் ஜாதகத்தில் நடந்த அஷ்டமசனிதானே, அவரது புத்திரர்களை
ஆட்டிப் படைத்து அந்த இனத்தின் அழிவுக்கே வழி வகுத்தது.! இத்தனை அரக்கத்தனம் கொண்ட எட்டாமிட சனியிடம் நாம் கருணையை கொண்டுவர இயலுமா என்றால்…. இயலும் அரக்கனையும் தேவனாக்கும் இரகசியம் நம் கைகளி லேதான் இருக்கிறது!

அது என்ன என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

கருத்து தெரிவிக்க