தமிழ் மக்கள் விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையின்மையால்; தமிழ் மக்கள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அல்லாமல் அரசைப் பாதுகாக்கும் தூதுவர்களாக தமிழ் தலைமைகள் செயற்படுவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக் குழுவின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான சண்முகலிங்கம் சஜீவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
இவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைளை எடுப்பதற்கு அரசியல் தலைமைகள் தவறியிருக்கின்றன. ,
இதனால் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மக்களுடைய பிரச்சனைகள் பாதிப்புக்கள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டாலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் வாடுகின்றனர்.
அவர்களது காணிகளை இராணுவத்தினர் வைத்திருக்கின்றனர்.
ஆகவே காணிகளை விடுவித்து மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும். ஆனால் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு காட்டினாலும் இன்னமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
இதில் ஒரு பகுதியை விடுவிப்பதாகக் கூறப்பட்டாலும் அதனை ஐனாதிபதியே வந்து விடுவிப்பதாகவும் கூறப்படுகிறது
ஆனால் ஐனாதிபதியின் யாழ் வருகை தொடர்ந்தும் தாமதிப்பதால் அந்தக் காணிகளும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன.
தையிட்டியில் பொது மக்களுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் வலிகாமம் வடக்கில் மதுபானசாலைகள் எதற்கும் அனுமதி கொடுக்காத நிலையில் அங்குள்ள ராணுவத்தினர் நடாத்தி வருகின்ற நலன்ரிக் கடைகளில் மதுபானம் விற்கின்றனர்.
இவ்வாறு பல பிரச்சனைகள் வலிவடக்கில் இருக்கையில் தொடர்ந்தும் பல பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டும் வருகின்றன.
ஆனால் இவற்றைத் தீர்ப்பதில் தமிழ் அரசியல் தலைமைகள் அக்கறையற்று இருக்கின்றனர்.
உண்மையில் இன்றைய சூழலில் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பார்க்க அரசைப்பாதுகாத்த அரசின் தூதுவர்களாக அரசைத் திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இதனால் தான் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆகவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் உடனடியாக எடுக்க வேண்டுமென்பதே மக்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.
இதற்கான நடவடிக்கைளை எடுக்கத் தவறுமிடத்தே போராட்டங்களை மக்கள் முன்னெடுப்பதற்கும் தயாராகி வருகின்றனர் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக் குழுவின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க