இந்தியா

காஷ்மீரில் பாஜக தலைவர், அவரது தந்தை, சகோதரர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை! பாதுகாவலர்கள் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பாண்டிபோரா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக தலைவர் மற்றும் அவரது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பாஜக தலைவரைக் காக்கும் பணியில் இருந்த 10 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை (பி.எஸ்.ஓக்கள்) கடமையை செய்யதாதற்காக போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பாண்டிபோரா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 9 மணியளவில் பாண்டிபோரா காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள தனது கடைக்கு வெளியே மாவட்ட பாஜக தலைவர் ஷேக் வசீம் பாரி மற்றும் அவரது சகோதரர் உமர் மற்றும் தந்தை பஷீர் அகமது ஆகியோரை தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர், அவர்கள் பாண்டிபோரா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த வேதனை அடைந்த பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் விசாரித்ததோடு, பாரியின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார் என்று மத்தியஅமைச்சர் ஜிதேந்திர சிங் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், வெளியிட்ட ட்விட்டில். இந்தக் கொலையால் தான் அதிர்ச்சியடைந்து வருத்தப்படுவதாகக் கூறினார். இது எட்டு பாதுகாப்பு கமாண்டோக்கள் இருந்தபோதிலும், பாஜக தலைவரும் அவரது தந்தையும் சுடப்பட்டுள்ளனர் ,” என்று கூறியுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்று வர்ணித்தார். “இது கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். எனது ஆழ்ந்த இரங்கல் குடும்பத்தினருடன் உள்ளது. ஒட்டுமொத்த கட்சியும் துயரமடைந்த குடும்பத்தினருடன் நிற்கிறது. அவர்களின் தியாகம் வீணாகாது என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று அவர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். “இன்று மாலை பாண்டிபூரில் பாஜக தலைவர் மற்றும் அவர்களது தந்தை மீது நடந்த கொலைகார பயங்கரவாத தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். அவர்களது குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.. துரதிர்ஷ்டவசமாக பிரதான அரசியல் தலைவர்கள் வன்முறையில் குறிவைப்பது தடையின்றி தொடர்கிறது.” என்று கூறினார்.

கருத்து தெரிவிக்க