வடக்கு செய்திகள்

மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைக்க அனுமதி மறுப்பு

மன்னார் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு மன்னார் பிரதேச சபை வழங்கிய அனுமதியை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.

குறித்த தோரண நுழைவாயில் அமைக்கும் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் கையெழுத்திட்ட கடிதம் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைக்க மன்னார் பிரதேச சபையினால் கடந்த 14 ஆம் திகதி வழங்கப்பட்ட அனுமதியின் பின்னர் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு எமது பிரதேச சபை எல்லைக்குள் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக இவ்விடயத்தில் சுமூகமான தீர்வினை ஏற்படுத்தும் வரை வழங்கப்பட்ட அனுமதியானது தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்படுகின்றது என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாந்தை சந்தியில் எந்த ஒரு மதப்பிரிவினுடைய தோரண நுழைவாயில்களும் அமைப்பதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என நானாட்டான் பிரதேச சபையின் அமர்வின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க