உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் நல்லிணக்கத்தை பேண வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் கடிதம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கு மதிப்பளிக்கவும் நல்லிணக்கத்தை பேணவும் வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

காங்கிரஸ் பிரதிநிதிகளான இல்ஹான் ஒமர், பில் ஜோன்சன், மற்றும் ஜிம் மெக்கோவர்ன் ஆகியோர், ராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான தூதர், சேம் பிரௌன்பேக் மற்றும் யுத்த குற்றங்களுக்கான அமெரிக்க தூதர் ஆகியோருக்கு குறித்த கடிதத்தை நேற்று அனுப்பியுள்ளனர்.

இலங்கையில் அமைதி குறைந்து பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவை தீவிரம் அடைவதற்கு இடமளிக்க கூடாதென இல்ஹான் ஒமர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘அமெரிக்கா உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காக செயற்பட்ட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருந்து மீள இலங்கையுடன் இணைந்து செயலாற்றும் போது போருக்குப் பிந்தைய நல்லிணக்கத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள மத சுதந்திரம் மீதான ஒடுக்குமுறைகளால் வருத்தமடைவதாக காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் மெக்கோவர்ன் கூறியுள்ளார்.

பல தசாப்த கால உள்நாட்டுப் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளானவர்களின் உரிமைகளை இலங்கை அரசு அழிக்கவோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ கூடாது என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க