ஜோதிடம்

பழமொழியில் ஜோதிடம்!

-ஆத்மவிசாரன்

மறைபொருளாய் விளங்கும் அனைத்து விஷயங்களிலும் சந்தேகம் கொள்வதே மனித மனதின் இயல்பு.
எது மறைபொருளான விஷயங்கள்… ஆன்மிகமும்,ஜோதிடமும்! முந்தையது இறைவனை சொல்கிறது… பிந்தையது வருங்காலத்தில் நிகழ இருப்பதை சொல்கிறது!

முன்னிருப்பதை காண ஊனக் கண் போதாது… பின்னிருப்பதை நம்புவதற்கு நம் அறிவு இடம் தராது! எதற்கும் சாட்சியும்,காட்சியும் இருந்தால்தான் மனம் நம்பிக்கை கொள்ளும்.
மனதின் சந்தேக இயல்பை புரிந்த முன்னோர்கள் இரண்டிற்குமே பெருத்த சாட்சியை பழமொழியில் பதித்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்…ஏனெனில் சாட்சிக்கு இருக்கும் பழமொழி அப்படி!

  • மந்திரம்தான் பொய்யானால் பாம்பை பாரு,
  • மருந்துதான் பொய்யானால் வானம் பாரு,
  • சாஸ்திரம் பொய்யானால் கிரகணம் பாரு,
  • சாமிதான் பொய்யானால் சாணம் பாரு!

இதுவே அந்த பழமொழி. இது தமிழர்களிடையே பேச்சு வழக்கத்திலுள்ள பழமொழி!
இறைவனை அர்ச்சிக்கும் மந்திரங்களில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால் சீறி வரும் பாம்பிற்கு முன் மந்திரம் சொன்னால் அது விரித்த படத்தை ஒடுக்கி பணிந்து செல்லும்! இதற்கு திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலே சாட்சி. அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகளின் வீட்டிற்கு திருநாவுகரசர் வந்திருக்கிறார். அவருக்கு அன்னமிட வாழையிலை அறுக்க பின்கட்டிற்கு சென்ற அப்பூதியடிகள் மகன் பாம்பு கடித்து இறக்கிறான். இதன் காரணமாக திருநாவுக்கரசர் உணவு உண்ணாமல் போய் விடுவாரோ என்ற அச்சத்தில் அப்பூதியடிகளும்,அவரது மனைவியும் மகன் இறந்ததை திருநாவுக்கரசரிடம் மறைக்கிறார்கள். ஆனால் அவரோ அப்பூதியடிகளின் மகனை தன்னுடன் சாப்பிட அழைக்கிறார். அப்போது உண்மையை மறைக்க இயலாமல், பாம்பு கடித்து இறந்ததை சொல்கிறார்கள். பதறிய திருநாவுக்கரசர் தேவாரம் பாடி, விஷத்தை இறக்கி, இறந்தவனை உயிர்ப்பிக்கிறார். ஏறிய விஷமே அஞ்சி இறங்குமென்றால் பாம்பு எம்மாத்திரம்! இதுதான் முதல் வரிக்கான விளக்கம்.

இரண்டாம் வரி மிக எளிதானது. வானத்தில் சென்று வெடிக்கும் பட்டாசில் உள்ள மருந்து பொய்யானதா இல்லையா என்பதை வாணம் பார்த்தால் கண்டு பிடித்து விடலாம். வாணவேடிக்கை காட்டினால் மருந்து அதிர்வேட்டு…சரியாக வெடிக்காமல் `புஸ்’ஸென்று போனால் அது வெத்துவேட்டு! அதனுள்ளே இருந்த மருந்து பொய்!

மூன்றாம் வரி ஜோதிடத்தை சிறப்பிக்க சொன்னது. நவீன காலத்தில் நாம் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்… தவறில்லை, ஆனால் சாஸ்திரத்தை மூடத்தனம் என்று ஒதுக்கிறோம். இது எவ்வளவு முட்டாள்தனம் என்று இந்த வரி கண்டிக்கிறது! சூரியனையும், சந்திரனையும் கிரகணங்கள் பீடிப்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த நவீன அறிவியலின் துணையுமின்றி ஜோதிடப் பஞ்சாங்கத்தில் துல்லியமாக குறிக்கப் பட்டிருக்கிறதே…இது எப்படி பொய்யாகும்… இதை விட ஜோதிடத்திற்கு என்ன சாட்சியம் வேண்டும்!

இறுதியாக இறைவன் பற்றியது! இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அவனே ஆதியானவன்… அனாதியானவன்… முதலும் முடிவும் அற்றவன். அதனால்தான் இறைவனை உருவம், அருவுருவம், அருவம் என்ற மூன்று நிலைகளையும் வலியுறுத்துகிறது நமது சமயம்… நமது உருவ வழிபாட்டை சிறப்பிக்கவே இந்த இறுதி வரி! கிராமங்களில் நடக்கும் பூஜைகளில் பசுவின் சாணத்தை `பிள்ளையாராக’ பிடித்து வணங்குவார்கள். பூஜை முடிந்த பின், தெருவில் வீசியெறிந்து விடுவார்கள். வீசியெறிபவர்களே அறியாத இரகசியமும் ஒன்று உண்டு!

சாணத்தை பிள்ளையாராக உருவேற்றி தானே வணங்கினார்கள்… அதில் இறைவன் உறைந்திருக்க வேண்டுமே! பொதுவாக தெருவில் பசு போடும் சாணத்தில் கரையான் வந்து அதை சாப்பிட துவங்கி விடும்… பிள்ளையாராக பிடிக்கப் பட்ட சாணத்தில் கரையான் வருவதில்லை! இறைவன் எங்கும் உறைந்திருக்கிறான் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்!!

கருத்து தெரிவிக்க