இந்தியா

தொழிலாளர்களை தெருவில்விட்ட ஆனந்தவிகடன்!

தமிழ்நாட்டில் தமிழில் வெளிவரும் பத்திரிகைகளில் ஆனந்தவிகடன் மிக முக்கியமான பத்திரிகையாக அறியப்படுகிறது. வெகுகாலமாக வெளிவரும் பத்திரிகையும் கூட. தமிழில் குமுதம் ஆனந்தவிகடன் இரண்டும் முதனிலை வகிப்பவை.

அவற்றுக்குள்ளான ஒப்பீட்டளவில் விகடன் தரமான இதழ் என்று ஒரு பிம்பம் உண்டு. பதினைந்து இருபது வருடத்திற்கு முன்பு வரை குமுதம் பரவலாக வாசிக்கப்படுவதாகவும் விகடன் பார்ப்பனர்களால் வாசிக்கப்படுவதாகவும் இருந்ததை அறியலாம். கால மாற்றத்தில் இலக்கிய வாசக சூழல் மாற்றம் மேலும் நிர்வாக மாற்றம் நிகழ்ந்த போது விகடனும் பரவலாக வாசிக்கப்படும் நிலை உருவானது.

இலக்கியச் செயல்பாட்டில் நேரடியாக இயங்கிய கவிஞர்கள் எழுத்தாளர்கள் பலரும் பணியமர்த்தப்பட்டார்கள். படைப்பாளிகள் பத்திரிகையாளர்களாக ஆனதற்கான முகமாற்றம் நிகழ்ந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்கள் வாங்கிப்போட்ட இயந்திரங்களுக்குத் தீனியாக பல துணையிதழ்கள் தொடங்கப் பட்டன.

ஆனந்த விகடனில் பலரும் ஏற்கத்தகாத பல கருத்துகள் அவ்வப்போது எழுதப்பட்டு வந்திருப்பதையும் அதனை முற்போக்குச் சிந்தனையாளர்கள் வன்மையாக கண்டித்த சம்பவங்கள் பல உண்டு. அப்போதெல்லாம் அதில் பணியாற்றும் படைப்பாளிகள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்விகளும் முன்வைக்கப் பட்டுள்ளன. அவர்களால் எதுவும் செய்யவியலாது என்பதே உண்மை. அந்த நிறுவனத்தில் பணியாற்றுவற்கான இணக்கமான சூழல் இல்லாமல் பணியிலிருந்து விலகியவர்களும் தம் பணி சார் மாற்றத்திற்காக அல்லது முன்னேற்றத்திற்காக விலகியதாகவே கணக்கில் கொள்ளப்பட்டார்கள்.

இந்தச்சூழலில், இப்போது நூற்றி எழுபது பேரை பணி நீக்கம் செய்வதாக ஆ.வி நிர்வாகம் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சிகரமானது. அதனை, ஆனந்தவிகடன் பத்திரிகை பாரம்பர்யம் , அறம், நேர்மை என்றெல்லாம் பேசுவதை விடவும் இத்தனைக்காலம் இவர்களின் உழைப்பால் பணம் சம்பாதித்த பெருமுதலாளி சற்றும் தனக்கு நேரும் இலாபக் குறைவைப் பொறுத்துக் கொள்ளவியலாமல் செய்யும் தொழிலாளர் விரோதம் என்பதாகவே அணுக வேண்டும்.

கொரனா காலத்தில் சம்பளக் குறைப்போ, வேலை இழப்போ கூடாதென அரசின் அறிவிப்பையும் அனைத்து தொழில் நிறுவனங்களும் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.

கருத்து தெரிவிக்க