இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் கஷ்ட காலம்!

ஊரடங்கால் நகர்ப்புறங்களில் வாழ்வாதாரத்தை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குக் கொடுமையான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் 5.43 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களாக உள்ளனர்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பிஹார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் கடந்த 20 வருடங்களாகப் பெருமளவில் தங்கள் ஊரகப் பகுதிகளிலிருந்து நகர்ப்புறங்களுக்குப் புலம்பெயருவது அதிகமாகியது. இவர்களில் பெரும்பாலானோர் முறைசாரா தொழிற்துறையில் பணிபுரிகிறவர்கள்.

கரோனா ஊரடங்கு இந்த திரளான மக்கள் தொகையை மீண்டும் ஊரகப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், நகர்ப்புறங்களில் மீண்டும் உற்பத்தியைத் துவங்குவதில் சிக்கல் நிலவுகிறது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களுக்கான கிராக்கி/தேவை (Demand) ஊரடங்கில் உற்பத்திக்கான தளர்வுகளை அறிவித்த பிறகு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில், ஊரடங்குக்குப் பிறகு நிலவும் நிச்சயமின்மை, பொருளாதார நிலை, நோய்த்தொற்று அச்சம், மருத்துவ உதவிகளின்மை, ஊரடங்கின்போது ஏற்பட்ட கடுமையான நெருக்கடிகள் போன்ற பல காரணங்களுக்காகவும் புலம்பெயரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருப்பதையே பாதுகாப்பாகக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்கனவே தடுமாற்றம் தென்பட ஆரம்பித்திருக்கிறது. கோல்ட்மேன் ஷாக்ஸ் (Goldman Sachs) நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பின்படி இந்தியப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையைச் சந்திக்கவுள்ளது. ஒரு நாட்டில் பொருளாதாரத்தில் மந்தநிலை என்றால் குறைந்தபட்சம் மூன்று காலாண்டுகளிலாவது தொடர்ச்சியாக வளர்ச்சியின்றிக் காணப்படவேண்டும்.

இதனால் அடுத்த சில காலாண்டுகளுக்கு இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியின்றி காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அறிக்கையில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 45 சதவீதம் வரை இரண்டாம் காலாண்டில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கால இடரைச் சரிசெய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதியுதவிகளைக் குறிப்பிட்டு, ‘இந்த அறிக்கைகள் பெரும்பாலும் இடைவரை கால நோக்குடன் இருப்பதால் இந்த நிதியுதவிகள் வளர்ச்சியில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த இடைவரை கால நடவடிக்கைகளும் பொருளாதாரத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைச் சீரான கால இடைவேளையில் ஆய்வு செய்வதன் மூலமே தெரியவரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க