ஜோதிடம்

சனிஸ்வரன் யார்? -1

– தமிழகத்தில் இருந்து குணா

……………………………..

நிறைய பொய் பேசுபவனை `அண்ட புளுகன்’ என்போம்… அதிகமாக செலவு செய்பவனை `ஊதாரி’ என்போம்… செலவே செய்யாதவனை `கருமி’ என்போம்… அறிவே இல்லாதவனை `முட்டாள்’ என்போம்… மெத்த படித்தும் அடக்கம் அற்றவனை `கர்வி’ என்போம்…

ஆனால் நாம் பிறரை திட்டவோ அல்லது அவமானப் படுத்தவோ `சனியனே…’ `உனக்கு நாக்குல சனியா?’ என்றும், `ஏழரை…’ என்று கேலி செய்யவும், `அவன் சனியன் புடிச்சவன் உருப்படவே மாட்டான்’ என்று சாபமிடுகிறோமே… இது சரியா? மற்றவரை இழிவு படுத்த தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளில் சனியின் பெயரை மையப் படுத்துகிறோமே… இது முறையா?

அந்த அளவுக்கு கொடுமைக்காரரா சனி…?!துன்பங்களின் சுமையை நம் மீது சுமத்துபவரா சனி…?!

உண்மையில் சனி எப்படிப் பட்டவர்…?! சனியே துன்பங்களின் மூலமாக இருந்தால், அன்பே உருவான இறைவனிடமே `ஈஸ்வரப் பட்டம்’ வாங்கி சனிஸ்வரனாக எப்படி சிறப்பு பெற்றிருக்க முடியும்! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற ஒளவையார் பாடிய செல்வத்தை அள்ளித் தருவதால் தானே `ஆயுள்காரகன்’ என்று ஜோதிடத்தில் சிறப்பித்து போற்றப் படுகிறார்! அளப்பரிய தாய் பாசம் கொண்ட சனி பகவானா, நம் உறவுகளை கெடுத்து, தனிமைப் படுத்தி துன்பங்களை கொடுப்பார்?! பின் எப்படி அவர் கொடுமைக்காரராய் சித்தரிக்கப் படுகிறார்?

இல்லை…! அப்படி இல்லவே இல்லை! அப்படியெனில் சனி யார்?

அது மிகவும் எளிதானது! நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையை அலசி ஆராய்ந்தாலே சுலபத்தில் புரிந்து விடும்!

தினந்தோறும் நாம் பேசும் பொய்கள், நம்முடைய சுயலாபத்திற்காக நம்மை ச்ந்தர்ப்பவாதிகளாக மாற்றிக் கொள்ளும் குணம், வெற்றி பெற்றால் ஓயாது `நான்… நான்…’ பெருமை பீற்றி நமது ஆணவம், நம் தோல்விக்கு பிறரை பொறுப்பாக்கும் நரித்தனம் என்ற நமது குணங்களுக்கு நேர் எதிரான நீதிமானே சனி பகவான்!

நாம் தவறு செய்யும் போது, எந்த வடிவிலாவது எச்சரிக்கை செய்வார்.. அது புரியாமலோ அல்லது அலட்சியப் படுத்தி விட்டு தவற்றை நாம் தொடர்ந்தலோ, அவர் நமக்கு உண்டாக்கும் சோதனைகள் நம் வாழ்வின் மீது பேரிடியாக வந்து இறங்கும்… அடி தான்! ஆனால் சம்மட்டி அடி!!

நம்மிடம் உள்ள தவற்றை சுட்டிக் காட்டுபவரிடமே கோபத்தை காட்டுவது, குறை சொல்பவரிடமே குற்றம் காண்பதும் நம் இயல்பாயிற்றே… சனியை மட்டும் விட்டா வைப்போம்! அதனால் தான் சனியை பிரதானப் படுத்தி வசவு வார்த்தைகள் பேசுகிறோம்!!

அப்படியெனில் அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரை சனி, கண்ட சனி இவையெல்லாம் நல்லதா.. கெட்டது இல்லையா என்ற யோசனை நமக்கு வரலாம்… ஆனால் உண்மையில் பிறப்பென்றால் இறப்பு, பகலென்றால் இரவு என்பது போல, நல்லது என்றால் கெட்டது… அவ்வளவே! இவையிரண்டும் வாழ்வில் மாறி மாறி வரும் விஷயங்கள்! இந்த நன்மை, தீமையை வழங்கும் பொறுப்பை எல்லா கிரகங்களுமே செய்கின்றன!

ஒருவருக்கு `குரு’ ஆகாதவரும் ஆகலாம்… இன்னொருவருக்கு `சனி’ வேண்டியவரும் ஆகலாம்!

ஆக சனியை `நல்லது – கெட்டது’ என்ற கண்ணாடியினை அணிந்து பார்க்காமல், பக்குவத்தோடு ஆராய வேண்டும். ஆமாம்…`பக்குவம் – பக்குவமின்மை’ என்ற கண்ணாடியினை நாம் அணிந்து, சனியை நோட்டமிட்டால் அனைத்தும் புரிந்து விடும்!

உதாரணமாய் முதல் சுற்று ஏழரையில் துன்பங்களும், இரண்டாம் சுற்று ஏழரையில் இன்பங்களும் ஏன் நிகழ்கின்றன என்பது உட்பட எல்லாம் புரிந்து விடும்! ஏன் என்பதை அடுத்த `சனிஸ்வரனும் வாழ்வும்’ என்ற கட்டுரைத் தொடரில் பார்ப்போம்!

கருத்து தெரிவிக்க