நேர்காணல்கள்புதியவைமுக்கிய செய்திகள்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம்மாறி பயணிக்கவில்லை”

“ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தடம்மாறி பயணிக்கவில்லை. அத்துடன், தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலான அரசியலையும் ஒருபோதும் முன்னெடுத்தது கிடையாது. இனியும் அவ்வாறு நடக்காது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் “ஊடகன்” வார இதழுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கேள்வி: அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது அடுத்த மாதம் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறு அமையும்?

பதில்- ஜுலை மாதம் 9, 10 ஆம் திகதிகளிலேயே குறித்த பிரேரணைமீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாளை (18) நடைபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும்.

பிரேரணையின் உள்ளடக்கம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கருத்தாடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளன. எனவே, உரிய நேரத்தில், உரிய வகையில் எமது நிலைப்பாடு அறிவிக்கப்படும்.

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியா வருமாறு அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். எப்போது இவ்விஜயம் இடம்பெறும்? இதன்போது எவ்வாறான விடயங்களை கலந்துரையாடுவதற்கு உத்தேசித்துள்ளீர்கள்?

பதில்- இலங்கை வந்திருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியை நாம் சந்தித்தோம். குறுகிய கால பயணம் என்பதால் அனைத்து விடயங்களையும் மனம்விட்டு கதைக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எனினும், கிடைத்த காலப்பகுதிக்குள் தீர்வு திட்டம் தொடர்பில் பேசப்பட்டது. குறிப்பாக பிளவுபடாத நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதேபோல் நீடித்து நிலைக்ககூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என எமது தலைவர் ( சம்பந்தன்) கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், இலங்கைக்கு இனியும் காலத்தை கடத்துவதற்கு இடமளிக்கவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். எனவே, இவை உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்துள்ளோம்.

எப்போது பயணம் இடம்பெறும் என்பது தொடர்பில் நாளை ( 18) நடைபெறும் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும். கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் எமக்கு திகதி வழங்கப்படும். விரைவில் பயணம் சாத்தியமாகும் என நம்புகின்றேன்.

இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் கூடிய விரைவில் தீர்வை பெறுவதே எமது இலக்காக இருக்கின்றது.

கேள்வி – ஆரம்பத்தில் சமஷ்டியைக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சமுர்த்தியைகோரும் நிலை உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் . குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் உங்கள் கருத்து?

பதில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியே சென்றோர், கூட்டணியை விமர்சிப்பதையே அரசியல் கொள்கையாக கொண்டு செயற்பட்டுவருகின்றனர். இப்படியானவர்கள் குறித்து நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

சமுர்த்தியானது வடக்கு மக்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இலங்கைவாழ் மக்கள் அனைவருக்குமே அது வழங்கப்படுகின்றது. எனவே, இதை கூட்டமைப்பு கெஞ்சி, கூத்தாடி பெறவில்லை. அரசாங்கமே வழங்குகின்றது. ஏழை மக்களுக்கு கிடைக்கும் உதவித்தொகையில்கூட அரசியல் நடத்த முற்படுவது கேவலமான செயலாகும்.

அரசியல் தீர்வே எமது பிரதான இலக்கு. இருந்தும் அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் புறந்தள்ளமுடியாது. இவற்றை கூட்டமைப்பு முறையாக கையாண்டு வருகின்றது. நாம் ஒருபோதும் தடம்மாறவில்லை. மாறவும் மாட்டோம்.

கேள்வி- டிசம்பர் 7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இம்முறை கூட்டமைப்பு எவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும்?

பதில் – இலங்கை அரசியல் வரலாற்றில் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது மிகவும் முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய மூன்று கட்சிகளிலிருந்தும் வேட்பாளர்கள் களமிறங்கக்கூடும்.

மூன்று தரப்புகளுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஆதரவைக்கோரும். எனவே, மக்கள் பக்கம் நின்று எமது தரப்பு கோரிக்கைகளை முன்வைப்போம். உரிய வகையில் உறுதிமொழியை வழங்கும் தரப்புக்கு, மக்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கிய பின்னர் ஆதரவு வழங்கப்படும்.

இம்முறை இறுதிவரை காத்திருக்காமல் ஆரம்பத்திலேயே உயர்பீடம்கூடி கலந்துரையாடி, தீர்க்கமான முடிவுகளை எடுக்கும்.

கேள்வி – ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமானால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவீர்களா?

பதில் – மாகாணசபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்படவேண்டும். ஆனால், அது ஒத்திவைக்கப்பட்டுவருகின்றது. எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள்கூடி ஆராய்ந்து கோரிக்கை விடுப்பார்களானால் முதல்வர் வேட்பாளராக நிச்சயம் களமிறங்குவேன். கடந்த முறைவிட்ட தவறை மீண்டும் விடமாட்டேன்.

என்னை போட்டியிடுமாறே கடந்தமுறை கோரினார்கள். எனினும், சில அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் விட்டுக்கொடுப்பை செய்தேன். ஆனால், வடக்கு மாகாண சபையில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதை நான் கூற விரும்பவில்லை. “ என்றார்.

நேர்காணல் – ஆர்.எஸ். பிரதா

கருத்து தெரிவிக்க