மலையகத்தில் தோட்டப்பகுதிகளை நகரசபையாகப் பிரகடனப்படுத்தி, அதிகாரங்களைப் பகிர்த்து – அதன்ஊடாக அம்மக்களின் வாழ்க்கை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
ஊடகன் வாரஇதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக மேலும் கூறியதாவது,
“ பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்னமும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. அவர்களை தொடர்ந்தும் அடிமைகளாக வழிநடத்தவே சிலர் முயற்சிக்கின்றனர். இந்நிலைமை மாறவேண்டும். காணிகள் பகிரப்பட்டுவந்தாலும், பெரும்பாலான மக்கள் காணியுரிமையற்றவர்களாகவே வாழ்ந்துவருகின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும்.
மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்த கல்விப்புரட்சியே சிறந்த வழியாக இருக்கின்றது. இன்று ஒருசிலர் கல்வியாளர்களாக வலம்வந்தாலும், பெரும்பாலான தோட்டப்பகுதி பாடசாலைகளில் கல்விமட்டம் இன்றைய நவீன உலகிலும் கீழ்மட்டத்திலேயே இருக்கின்றது. மருத்துவமும் அப்படிதான்.
எனவே, தோட்டப்பகுதிகளை அதாவது குறிப்பிட்டதொரு எல்லைக்குட்பட்ட தோட்டங்களை இணைத்து, அப்பகுதிக்கென நகரசபையொன்று உருவாக்கப்படவேண்டும். அச்சபைக்கு அதிகாரங்களைப் பகிரவேண்டும். நகரசபைக்குரிய அனைத்து சலுகைகளும் வழங்கப்படவேண்டும்.
சமூக மாற்றத்துக்கான பயணத்துக்கு இதுவே சிறப்பான ஆரம்பமாக இருக்கும்.
பெருந்தோட்டங்கள் உள்ள பகுதிகளில் தற்போது உள்ளாட்சி சபைகள் இருந்தாலும் அவற்றில் கிராமத்தவர்களே அதிகமாக அங்கம் வகிக்கின்றனர். இதனால், தோட்டப்பகுதி மக்களுக்கான குரல் ஓங்கி ஒலிப்பதில்லை. பெரும்பாலான பகுதிகளில் நிலைமை இவ்வாறே உள்ளது.
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கென தனியானதொரு வாழ்க்கை முறைமை, கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் இருக்கின்றன. அவற்றை பாதுகாத்து, முன்நோக்கி பயணிக்கவேண்டுமெனில் தனியான நகரசபை முறைமையே சிறப்பானதாக அமையும்.
சிறிய, சிறிய தோட்டங்களையெல்லாம் நகரசபையாக்கவேண்யதில்லை. ஒரு வலயத்தை தேர்ந்தெடுத்து அப்பகுதியிலுள்ள தோட்டங்களை உள்ளடக்கி நகரசபைகளை அல்லது அதற்கு ஒப்பான சபைகளை உருவாக்கலாம்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக இதை செய்யலாம். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதுள்ள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் ஊடாக தோட்டப்பகுதிகளுக்குரிய சபைகளை உருவாக்கலாம்.
இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. அரசாங்கத்தின் ஊடாக மலையகப் பகுதிகளுக்கு கூடுதல் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பு உதயமாகியுள்ளது. எனவே, மேற்படி முன்மொழிவை நிறைவேற்றுவதற்கான உதவிகளைக்கூட கோரலாம்.’’ என்றார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.
கருத்து தெரிவிக்க