பண்பாடுபுதியவை

தந்தையர் தின சிறப்பு!

“தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே…” என்ற பாடல் வரிக்கு அமைய தந்தை எமக்கு செலுத்தும் அன்புக்கு ஈடு இல்லை.

ஒரு குடும்பத்தில், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் அந்த குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது.

இருந்தாலும், குடும்பத்திற்காக மாடாய் உழைத்து, ஓடாய் தேயும் தந்தையைவிட, அன்பை பொழியும் தாயைத்தான் பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகம் பிடிக்கிறது.

உலகம் முழுவதும் ‘அன்னையர் தினம்’ என்பது காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், ‘தந்தையர் தினம்’ என்பது 1910ஆம் ஆண்டில் இருந்து தான் கொண்டாடப்படுகிறது.

அதற்கு காரணமாக விளங்கியவர் அமெரிக்காவை சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண்.

அவரது தாயாரின் மறைவுக்கு பிறகு, அந்த குடும்பத்தில் இருந்த 6 பிள்ளைகளையும் தந்தை வில்லியம்ஸ் தான் கடும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்தார்.

தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து கடமையை நிறைவேற்றிய தனது தந்தையை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.

அதன் அடிப்படையில், அன்னையர் தினத்தைப்போல் தந்தையர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று அவர் பிரசாரம் செய்தார்.

அவரது கோரிக்கையை, அப்போதைய ஸ்போக்கேன் நகர ஆளுநர் அங்கீகரித்தார். அதன்பின்னர் தான், தந்தையர் தினமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று உலகம் முழுவதும் 52 நாடுகளில் ஜூன் மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமை ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது. வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க