உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஹிஸ்புல்லாஹ்விற்கு நிபந்தனை அடிப்படையில் சஹ்ரான் உதவினார் – முழு விபரம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த தலைமைதாங்கிய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர்; சஹ்ரான் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கியதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவிக்கின்றார்.
கிழக்கு மாகாணத்தில் சஹ்ரான் தலைமையிலான தவ்ஹீத் ஜமாத் இயக்கமும் ஸ்ரீலங்கா பொலிஸாரும் நண்பர்களாக இணைந்தே செயற்பட்டிருப்பதாகவும் அசாத் சாலி நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி சாட்சியமளித்தார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலப் பகுதிகளில் தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கே தாம் உதவிகளை வழங்குவதாக தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹாரான் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களை கொடுக்கும் அளவிற்கு மொஹமட் சஹாரானிற்;கு அதிகாரங்கள் எங்கிருந்து கிடைத்தது என இதன்போது குறிக்கிட்டு தெரிவுக்குழு உறுப்பினர்கள், அசாத் சாலியிடம் கேள்வி எழுப்பினார்கள்.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மொஹமட் சஹாரான், மக்களை அச்சுறுத்தி தனது ஆளுகைக்குள் அவர்களை வைத்திருந்ததாக அவர், தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.
தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாத்திரமே, தேர்தல் காலப் பகுதியில் தான் உதவிகளை வழங்குவதாக அவர் கூறி வந்த பின்னணியிலேயே, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மொஹமட் சஹாரான், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்துள்ளதாகவும், அதனால் சஹாரானின் பேச்சுக்களுக்கு அந்த பகுதி மக்கள் செவி மடுத்து வந்துள்ளதாகவும் அசாத் சாலி குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மொஹமட் சஹாரானுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் காணப்படும் விடயங்கள் என்னவென இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
தமது தேர்தல் பிரசாரங்களின் போது, பட்டாசுகளை கொளுத்த கூடாது, பாடல்கள் ஒலிபரப்பப்பட கூடாது உள்ளிட்ட சில விடயங்கள் அந்த உடன்படிக்கையில் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மட்டக்களப்பு அரேபியப் பல்கலைக்கழகம் நிறுவனத்திற்கான சவூதி அரேபியாவின் ஊடாக நிதியுதவி கிடைத்தமையை தான் அறிவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறினார்.
இந்த பல்கலைக்கழகம் முழுமையான ஷரியா கற்கை நெறியை கற்பிக்கும் பல்கலைக்கழகம் கிடையாது என கூறிய அவர், அந்த பல்கலைக்கழகத்தில் ஒரு பாடநெறி மாத்திரமே ஷரியா எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டம் காணப்படுகின்ற பின்னணியில், முஸ்லிம்களுக்காக ஷரியா சட்டம் அத்தியாவசியமானதா? என தெரிவுக்குழு உறுப்பினர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்கள்.
அதற்கு பதிலளித்த அசாத் சாலி, முஸ்லிம்களின் பாரம்பரிய சட்டமாக ஷரியா சட்டம், முஸ்லிம்களுக்கு அத்தியாவசியமானது என கூறினார்.
பள்ளிவாசல்களை நிர்வகித்தல், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் உள்ளிட்டவையே ஷரியா சட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டத்தின் எந்தவித பிழையான விடயங்களும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அப்துல் ராசிக் என்ற நபர் கைதுசெய்யப்படாது வெளியில் நடமாடுகின்றமையானது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என அசாத் சாலி, தெரிவுக்குழு முன்னிலையில் கூறியிருந்தார்.
அப்துல் ராசிக் குறித்து தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று தடவைகள் கூறியதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பதிகாரியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியமையை தான் அறிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்துல் ராசிக், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி வருவதாக கூறிய அவர், அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், ஆடைகள் குறித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் ஊடாக முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி முஸ்லிம்களுக்கு நியாயத்தை பெற்றுத் தருமாறும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, தெரிவுக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுதவிர, அங்கு தொடர்ந்தும் சாட்சியமளித்த முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா பொலிஸாரும், தீவிரவாதி சஹ்ரான் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கமும் நண்பர்களாக இணைந்தே செயற்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

கருத்து தெரிவிக்க