இந்த அரசாங்கம் எமக்கு தீர்வுகளை வழங்காது தமிழர்களை திசை திருப்பும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது என்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற சுதந்திரபுரம் படுகொலையின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
‘சுதந்திரபுரம் படுகொலை என்பது ஒரு வரலாற்று பதிவு இதில் 33 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் பலர் காயமடைந்துள்ளார்கள்.
இந்த படுகொலைகள் செய்யப்பட்டு எங்கள் உறவுகள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர் . இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னரும் இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்.
ஆனால் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டாலும் தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்டவர்களுக்கோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அரசியல் தீர்வோ வழங்க சிங்கள அரசு தயாராக இல்லை.
இதனால் நாங்கள் இப்போது தொடர்ச்சியாக சர்வதேசத்தின் நியாயத்தினை கோரி நிக்கின்றோம்.
இப்போது நாங்கள் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் தமிழர்களின் அரசியல் தீர்வினையும் தாண்டி அதனைத்தான் எல்லோரும் பேசுகின்றோம். இதனை அரசின் திட்டமிட்ட செயலாக பார்க்கின்றோம்.
சுதந்திரபுரம் படுகொலைகளை நாங்கள் நினைவிற்கொள்ளவேண்டும். தமிழர்களுக்கு நடந்த அநீதிகள் இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்லவேண்டும்” என்று வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க