உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உடனடியாக ஜனாதிபதி தேர்தலே வேண்டும்! – மஹிந்தவின் ஆதரவாளர் பந்துல தெரிவிப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமானால் உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் இதற்கு முன்னர் நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுவதற்கு உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மஹிந்தவின் கட்சியினர் வலியுறுத்தி வந்திருந்தது மாத்திரமன்றி கடந்த ஆண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சியினர் கூட்டாக இணைந்து நாடாளுமன்றிலுவும் அதேவேளை நீதிமன்றின் ஊடாகவும் அந்த முயற்சிகளை தோற்கடித்த நிலையிலேயே தற்போது  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி தேர்தலை வலியுறுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கிய சிறிலங்காவின் அரச தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தப் பதவிக்கு தற்போதைய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை நியமித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிசேன, பொதுத் தேர்தலை கடந்த ஜனவரி 5ஆம் திகதி நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.

எனினும் மஹிந்த – மைத்ரி இணைந்து மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்தும், அரச தலைவரின் பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தியும் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் நீதிமன்றத்தை நாடின.

இதற்கமைய மனுக்களை விசாரித்திருந்த உச்ச நீதிமன்றம் மைத்ரி – மஹிந்த இணைந்து மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பையும் அதேபோல் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பையும் அரசிய் சாசனத்திற்கு விரோதமானது என அறிவித்தது.

இதனையடுத்து இலங்கையின் பிரதமராக கடந்த ஆண்டு டிசெம்பர் 16 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டதுடன், ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சியை அமைத்தது.

இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொருளாதாரப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கடந்த 52 நாள் நீடித்த மைத்ரி – மஹிந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இதுவரையான பிரச்சினைகள் எழுந்திராமல் புதிய அரசாங்கமும் அமைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க